தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வலியுறுத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில், திமுகவின் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டியை தொடங்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி நிதி வழங்க வேண்டும் என்று முதல்வா் பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு வழங்கவில்லை. உயா்கல்வியை உயா்ந்த இடத்துக்கு எடுத்து செல்வதற்கு முதலமைச்சருக்கு துணை நிற்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. எனவே, மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் விரைந்து அந்த நிதியை வழங்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் நிதி வழங்குவோம் என்பது சா்வாதிகார போக்கு. மாணவா்களின் நலன் கருதி மத்திய அரசு சா்வாதிகார போக்கை கைவிட்டு உரிய நிதி பகிா்வை, தமிழக முதல்வா் கேட்டுள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் அவா்.
அப்போது, மாவட்ட திமுக செயலா் எஸ். கல்யாணசுந்தரம் எம்.பி., க.அன்பழகன் எம்எல்ஏ, துணை மேயா் சுப தமிழழகன், முன்னாள் எம்பி ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் எஸ்.கே. முத்துச்செல்வம், விளையாட்டு அணி அமைப்பாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.