திருப்பூர்: பல்லடம் அருகே காதல் விவகாரத்தால் தங்கையை கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகன் சரவணன் (24), மகள் வித்யா (22). சரவணன் எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், திருப்பூர் விஜயாபுரத்தை ர்ந்த வெண்மணி (25) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 30-ம் தேதி வித்யாவின் வீட்டில் இருந்தவர்கள் தேவாலயத்துக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோ சரிந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் வித்யா சடலமாக க்கிடந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்தனர்.
வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம், கிராம மக்கள் புகார் அளித்தனர். தகவலின்பேரில் பல்லடம் வட்டாட்சியர் சபரிகிரி, காமநாயக்கன்பாளையம் போலீஸார் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் வித்யாவின் சடலத்தை தோண்டி எடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர்.
வித்யா தலையின் பின்பக்கத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் தண்டபாணி, சரவணன் ஆகியோரை காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரித்தனர். பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வித்யாவை கொலை செய்ததை சரவணன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை காமநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்தனர்
இதுதொ டர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘வெண்மணியும், வித்யாவும் காதலித்து வந்தது சரவணனுக்கு தெரியவந்தது. வித்யாவை படிப்பில் மட்டும் கவனம் செலுத்தும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார். இதற்கு வித்யா எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வித்யாவுக்கும், சரவணனுக்கும் அடிக்கடி பிரச்சினை எழுந்தது. கடந்த 30-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த வித்யாவை அரிவாளால் வெட்டி சரவணன் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தின் மீது பீரோவை விழவைத்து, விபத்துபோல சித்தரிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது’’ என்றனர்.