பல்லடம் சம்பவம்: சட்டம் – ஒழுங்கை சீராக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் | O. Panneerselvam talks on Chief Minister

1341541.jpg
Spread the love

சென்னை: சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில், சட்டம் – ஒழுங்கு சீரழிவில், போதைப் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டை ஆக்கப்பூர்வமான பாதையில் அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அழிவுப் பாதையில் திமுக அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு போதை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது என்றும், மக்களின் உயிருக்கும், உடமைக்கும் உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என்றும் தெரிவித்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்த திமுக அரசை வலியுறுத்தி அவ்வப்போது நான் அறிக்கை விடுத்துக் கொண்டேயிருக்கிறேன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சட்டம் ஒழுங்கு சீரழிவை சுட்டிக்காட்டி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு மோசமாகிக் கொண்டிருக்கிறதே தவிர, சீராகவில்லை.

இந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சேமலை கவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், விவசாயி தெய்வசிகாமணி, அவரது மனைவி அமலாத்தாள் மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை படுகொலை செய்துவிட்டு சென்றுள்ள செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

குற்றம் இழைப்போர் மீது மென்மையானப் போக்கினை திமுக அரசு கடைபிடிப்பதுதான் தமிழ்நாட்டில் ஆங்காங்கே கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதற்குக் காரணமாக விளங்குகிறது. வன்முறையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய காவல் துறை, இப்போது வன்முறையாளர்களைக் கண்டு அஞ்சுகிறது. காவல் துறையை இந்த நிலைக்கு ஆளாக்கிய திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாடு வன்முறைக் களமாக மாறிக் கொண்டிருக்கிறது. மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தங்களுடைய உயிர்கள் எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில் தமிழ்நாட்டு மக்கள் உள்ளனர்.

சட்டம் – ஒழுங்கை சீராக்கினால்தான் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும் என்பதை மனதில் நிலைநிறுத்தி, இனிமேலாவது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டுமென்றும், மேற்படி படுகொலைகளுக்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, விரைந்து தண்டனைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *