பல ஆண்டு​களுக்கு முன்பு உருவாக்​கப்​பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்: நீதிபதி ஜி.ஆர்​.சுவாமிநாதன் | Justice GR Swaminathan says It is necessary to review the laws that were made many years ago

1344298.jpg
Spread the love

சென்னை: பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

எமரால்டு பதிப்பகம் சார்பில் ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பெ.கண்ணப்பன் எழுதிய ‘புலன் விசாரணை – ஒரு கலை’, ‘சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?’, மற்றும் தினத்தந்தி ‘4-ம் பக்கம்’ சு.நாராயணன் எழுதிய ‘தடம் பதித்த ஆளுமைகள்’ புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை எழும்பூரில் உள்ள எமரால்டு பதிப்பகம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சி.ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி தலைவர் எம்.டிராட்ஸ்கி மருது, நூலாசிரியர்கள் பெ.கண்ணப்பன், சு.நாராயணன் உள்பட ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

‘புலன் விசாரணை – ஒரு கலை’, ‘சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?’, ஆகிய நூல்களின் முதல் பிரதியை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட, ஓய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சி.ஈஸ்வரமூர்த்தி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோரும், ‘தடம் பதித்த ஆளுமைகள்’ நூலின் முதல் பிரதியை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட அதனை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி தலைவர் எம்.டிராட்ஸ்கி மருதுவும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: காவல்துறையினர் ஒரு வழக்கில் புலனாய்வுகளை சிறப்பாக செய்தாலும் கூட நம் சட்டங்களில் உள்ள அம்சங்கள் காரணமாக பல பிரச்சினைகள் காவல்துறையினருக்கு வரலாம். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் மத்திய அரசால் “பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்‌ஷியா சட்டம்’’ என பெயர் மாற்றப்பட்டது.

சட்டங்களின் பெயர் தான் ஆங்கிலத்தில் இருந்து சமஸ்கிருதத்துக்கு மாறியிருக்கிறதே தவிர, சட்டத்தின் கூறுகளில் மாற்றம் இல்லை. சட்டங்களில் பல தடைகள் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பிடித்து இன்னமும் நாம் பின்பற்றி வருகிறோம். எனவே, சட்டங்களை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். சமுதாயத்தில் தானாக மாற்றங்கள் ஏற்படாது. சரியான ஆளுமைகள் இருந்தால் தான் மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் பேசுகையில், ‘ஒரு வழக்கில் புலன் விசாரணை என்பது மிகவும் முக்கியம். புலன் விசாரணையை சரியாக செய்யவில்லையென்றால், மக்களுக்கு போலீஸ் மீதான நம்பிக்கை இழக்க நேரிடும். அதேபோல், குற்றவாளிகளுக்கும் சட்டத்தின் மீதும், காவல்துறை மீதும், சமூகத்தின் மீதும் பயம் இல்லாமல் போய்விடும். அந்தவகையில், விசாரணையை நேர்மையாகவும், சட்டப்படியும், நியாயமாகவும் செய்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *