மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் அடுத்த மாதுளங்குப்பம் பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள ஏரி கலங்கல் பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் சிறிய அளவிலான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில் மாதுளங்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, இருளர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பணிக்கு செல்வதற்கு ஏரிக்கரை மீது அமைக்கப்பட்டுள்ள சாலையை பயன்படுத்திதான் நகருக்குள் வந்து செல்ல வேண்டும். ஆனால், ஏரியின் கலங்கல் பகுதியில் சாலை தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறும்போது, குறிப்பிட்ட பகுதி சாலை நீரில் அடித்து செல்லப்படுகிறது.
அதனால், குறிப்பிட்ட கலங்கல் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தநிலையில், பாலம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் நகர உள்கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டத்தில் ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம், தற்போது 350 மீட்டர் நீளத்துக்கு சிறிய அளவிலான உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாதுளங்குப்பத்தை சேர்ந்த பானு கூறியதாவது: கலங்கலில் உபரிநீர் வெளியேறும்போது பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அப்பகுதியை கடந்த செல்வதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கும் நிலை இருந்தது. தற்போது, பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.