சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும் முதலீட்டாளர்கள் சங்கம் சார்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அக்டோபர் 30-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அவர் விசாரணைக்குத் தேவையானபோது ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது மற்றும் வேறு எங்கும் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் யாதவ் சரணடைய மேலும், ஒரு வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதி, ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் முன்பு வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு முதலீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, தேவநாத யாதவ் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் படி 100 கோடி ரூபாய் செலுத்தவில்லை என்றும் சரணடையவில்லை என்றும் முறையிட்டார். மேலும் , ஒரு வார கால அவகாசம் வழங்கியும் அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த முறையீட்டை விசாரித்து நீதிபதி, நிபந்தனையை நிறைவேற்றாவிட்டால் அவரை காவல் துறையினர் கைது செய்வார்கள் என்றும், இந்த வழக்கை உடனடியாக பட்டியலிட முடியாது என்றும் தெரிவித்தார்.