“பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது!” – மு.வீரபாண்டியன் நேர்காணல் | CPI Mu Veerapandiyan interview

1379815
Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் மு.வீரபாண்டியன், சமீபகால அரசியல் நகர்வுகள், கட்சி வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் திட்டங்கள், திமுக கூட்டணியில் தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நீங்கள் கட்சியை வளர்த்தெடுப்பதில் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

​கொள்கை அளவில் மேலிடத்​தில் இருந்து கட்​டப்​படும் கட்சி எங்​கள் கட்​சி. ஆனால், மேலிடத்​திலிருந்து உத்​தரவு வரும் என்று காத்​திருக்​காமல் கிளை​கள், இடை கமிட்​டிகள் தன் இயல்​பில் மக்​களின் பிரச்​சினை​களுக்​காக போராட வேண்​டும். அதற்​காக கட்சி கிளை​களை அரசி​ய​லாக​வும், அமைப்பு நிலை​யிலும் பக்​கு​வப்​படுத்​து​வது​தான் என் முதல்​படி.

தொடர்ந்து திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைத்து வருவதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனமாகி விட்டதாக நினைக்கிறீர்களா?

அப்​படி இல்​லை. இன்​றைய காலத்​தில் எங்​களது முதல் கடமை பாஜகவை வீழ்த்​து​வது. மாநில உரிமை, கூட்​டாட்சி முறை, அதி​கார பரவல் ஜனநாயகத்​துக்கு முக்​கி​யம். அந்த வகை​யில் தற்​போது இந்த கூட்​ட​ணி​யில் இருந்து தான் பாஜகவை வீழ்த்த வேண்​டும். எதிர்​காலத்​தில் இடது​சா​ரி​கள் எங்​களுக்​குள் நெருங்கி வரு​வோம்; அப்​போது புதிய திசை​யில் பயணிப்​போம்​.

கூட்டணியில் விரும்பும் தொகுதிகளை கூட உங்களால் கேட்டுப் பெற முடியாததால் கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதாக எடுத்துக் கொள்ளலாமா?

கம்யூனிஸ்ட் கட்சி இல்லாத கூட்டணிக்கு தான் செல்வாக்கு இருக்காது. எங்களால் பிற கட்சிகளை போல் வாக்குகளை பெறமுடிவதில்லையே தவிர, நாடு முழுவதும் எங்களுக்கு அமைப்பு இருக்கிறது. தொடர்ந்து எங்களால் இயங்க முடியும். ஆகவே, எங்களை யாரும் எளிதில் கடந்து சென்றுவிட

முடியாது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்?

கடந்த முறை 6 இடங்​களில் போட்​டி​யிட்​டோம். தற்​போது கட்சி வளர்ந்​திருக்​கிறது. எங்​களிடம் இல்​லாதது பணம் மட்​டும்​தான். இதனால் சூழலுக்கு ஏற்​ற​வாறு 6 முதல் 10 இடங்​கள் வரை கேட்டு வரு​கிறோம். முதல்​வர் அதை பரிசீலிப்​பார் என்று நம்​பு​கிறோம். நாளை சூழல் மாறும்​போது 30, 40 இடங்​களைக் கேட்​கும் நிலை வரும்​.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு கட்சியின் தலைவராக விஜய் என்ன செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பிரச்சாரத்தை நடத்தியது விஜய். துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கும் போது தலைவர் அங்கே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், பாதிக்கப்பட்டது மக்கள். இந்த மரணங்களுக்கு விஜய் தான் காரணம் என எந்தக் கட்சியும் சொல்லவில்லை. ஆனால், அவர் தார்மிக பொறுப்பு ஏற்க வேண்டும். விசாரணைக்கு இணங்க வேண்டும்.

விஜய் வருகை அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் பாதிக்கும் என்று கொமதேக தலைவர் ஈஸ்வரன் கூறியிருக்கிறாரே..?

ஒருவேளை, அது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அல்ல. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் என அனைவருமே தனித்தனி வாக்கு வங்கிகளை வைத்திருக்கிறோம். நாங்கள் முன்னெடுக்கும் அரசியல் கருத்துகளால் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் எங்களுக்குத் தான் கிடைக்கும்.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியதை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். இருந்தாலும் இன்னும் பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறுகிறது; சிரமப்படுகிறது. முதல்வர் அதை மறுக்கவில்லை; ஒப்புக்கொள்கிறார். இதற்குக் காரணம், நமக்கு வரவேண்டிய நிதி வரவில்லை. கருத்தியல், அரசியல் ரீதியாக முரண்படுவதற்காக நிதியை நிறுத்தக்கூடாது.

அதிமுக – பாஜக கூட்டணி, விஜய்யின் வருகை, நாதக வளர்ச்சி ஆகியவை திமுக கூட்டணியின் வாக்கு விகிதத்தை பாதிக்குமா?

இவர்களை விட பெருமளவு மக்கள் செல்வாக்கு கொண்ட எம்ஜிஆர் இருந்தபோதே, திமுகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படவில்லை; வாக்குகள் சிதறவில்லை. எங்களிடம் நல்ல அரசியல் இருக்கிறது. அது தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களின் நலன் சார்ந்த அரசியலாகும். இதை வீழ்த்தும் வலிமை அதிமுக – பாஜக கூட்டணிக்கு இல்லை.

ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

பல கட்சிகள் இயங்கும் முறை கொண்ட ஒரு நாட்டில் ஆட்சி பரவலாக்கப்பட வேண்டும். ஆனால், ஆட்சி அதிகாரம் என்று சொல்லும்போது ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம், கொள்கைகள் இருக்கவேண்டும். அவை தேசத்தின் நலன் சார்ந்தும், உழைக்கும் மக்களின் நலன் சார்ந்தும் இருக்கவேண்டும். இவற்றை பலி கொடுத்துவிட்டு அதிகாரத்தில், கூட்டாட்சியில் அமர்வதில் கம்யூனிஸ்ட்களுக்கு உடன்பாடு இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் ஆ,ராசா, பொதுவுடைமை இயக்க தலைவர்கள் ஜீவா, சிங்காரவேலர் போன்றோர் திராவிட இயக்கத்தை விமர்சித்தனர். ஆனால் இப்போது, பெரியார் தான் தேவை என்று கூறும் நிலை உள்ளதே என்று பேசி இருக்கிறாரே?

பெரியாருக்கும் ஜீவாவுக்கும், பெரியாருக்கும் சிங்காரவேலருக்கும் முரண் இருந்தது உண்மை. இது வளர் முரண்; பகை முரண் அல்ல. சுயமரியாதையின் அடிப்படை சமத்துவம். திராவிட கழக கொடியில் கருப்பு, சிவப்பு இருக்கிறது. அறியாமை, மூடநம்பிக்கையை அறிவிப்பது கருப்பு. அது நீங்கிவிட்டால் உலகமெங்கும் செங்கொடி தான் பறக்கும் எனச் சொன்னவர் பெரியார். இதற்கு மேல் கம்யூனிஸத்தை யார் முன்மொழிய முடியும்?

தமிழகத்தில் உள்ள சமூக நீதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கைகள், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு போன்றவற்றில் உங்களது நிலைப்பாடு என்ன?

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் யாருமே பின்தங்கி இருக்கக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பொருளாதார அளவுகோல் கொண்டு பார்க்கக்கூடாது; சமூக நீதியுடன் பார்க்கவேண்டும். கல்வியுடன் கலாசார மாற்றம் ஏற்படும் போதும், சாதி உலர்ந்து உதிர்கிற போதும் இட ஒதுக்கீட்டுக்கு அவசியம் இருக்காது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *