ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர், ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஷிவ் கோரி பகுதிக்கு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர்.
பஸ் கவிழ்ந்தது
ஜம்மு மாவட்டத்தின் சோகி சோரா மலைப்பகுதியில் உள்ள டாங்லி மோர் என்ற இடத்தில் சென்ற போது திடீரென டிரைவரின கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 500 அடிக்கு கீழ் பள்ளத்தாக்கில் பலமுறை உருண்டு பஸ் கீழே விழுந்தது.
இந்த விபத்தில் சுமார் 21 பேர் பலியானார்கள்.
மேலும் சுமார் 40 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர். பஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி கிடந்ததால் பலியானவர்கள் உடல்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் களை மீட்பதில் கடும் சவால் ஏற்பட்டது.
மீட்பு பணி
போலீசார் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அக்னூர் மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். விபத்தில் காயம்அடைந்தவர்களில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலியான சம்பவம் அனைவரது மத்தியிலும் கடும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி இரங்கல்
இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
“ஜம்மு அருகில் உள்ள அக்னூரில் ஏற்பட்ட பஸ்விபத்தில் உயிர் இழப்புகள் சொல்ல முடியாத வேதனையை அளித்துள்ளது. விபத்தில் பலியானவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள இரங்கல்செய்தியில், அக்னூர் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனை அடைந்தேன்.அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மல்லிகார்ஜுன் கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் பஸ் விபத்துக்குள்ளானதில்21 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கேட்டு கொள்கிறேன். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இந்த துயர நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் நிற்கிறோம்“ என்று தெரிவித்து உள்ளார்.