சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.2000 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த திமுக அரசு உத்தரவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ராம்சர் தலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலை எல்லைக்குள் 1250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு அளித்துள்ள விளக்கம், இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி நடைபெற்றிருப்பதை உறுதி செய்திருக்கிறது. சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசே, கட்டுமான நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அவற்றை அழிப்பது கண்டிக்கத்தக்கது.
பிரிகேட் எண்டர் பிரைசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படவுள்ள நிலத்தில் சர்வே எண்கள் 453, 495, 496, 497, 498 ஆகியவை ராம்சர் சதுப்பு நில எல்லைக்குள் வருகின்றன. இவற்றின் பரப்பளவு 14.7 ஏக்கர் ஆகும். ராம்சர் தலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று விதிகள் இருக்கும் நிலையில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சிஎம்டிஏ அமைப்பும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி அளித்திருப்பதன் பின்னணியின் மர்மம் என்னவென்று தெரியவில்லை.
இதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் நேற்று விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,”ராம்சர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள 1,248 ஹெக்டேர் பரப்பளவில், பள்ளிக் கரணை சதுப்பு நில காப்புக்காட்டில் உள்ள 698 ஹெக்டேர் நிலமும், உரிய நடைமுறைகளுக்குப் பின்பு வரையறுக்கப்படவுள்ள 550 ஹெக்டேர் கூடுதல் நிலமும் அடங்கும்.
ஈர நில விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள நிலப் பகுதிகளை சர்வே எண்களுடன் கண்டறிந்து வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ராம்சர் தலம் அமையும் நிலங்கள் இன்னும் வரையறுக்கப் படாததால், இப்போது கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ள இடம் பட்டா நிலமாகவே கருதப்படும்” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த பதில் பொறுப்பற்றது ஆகும். இந்த விளக்கத்தின் மூலம் பள்ளிக்கரணை ராம்சர் தலப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட பிரிகேட் எண்டர் பிரைசஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதையும், அதை விஞ்ஞான பூர்வமாக செய்திருப்பதையும் திமுக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சர் ஈர நிலமாக கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 26ம் நாள் அறிவிக்கப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்தப் பகுதியை தமிழக அரசு மேம்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதன் பின் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை அதன் எல்லைகள் மற்றும் தாக்கப்பகுதிகள் வரையறை செய்யப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் இப்போது பிரிகேட் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு தமிழக அரசே நினைத்திருந்தாலும் அனுமதி வழங்கியிருக்க முடியாது. இது போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதற்காகவே ராம்சர் தலத்தின் எல்லைகளை தமிழக அரசு வரையறுக்கவில்லை என்பது தான் பாமகவின் குற்றச்சாட்டு ஆகும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைகளும், தாக்கப்பகுதிகளும் வரையறுக்கப்பட்டு, இரண்டாவது பெருந்திட்டத்தில் சேர்க்கப்பட்டால், அப்பகுதியில் நிகழ்த்தப்படும் கட்டுமானங்களும், ஆக்கிரமிப்புகளும் இப்போதே தடுக்கப்பட்டு விடும். அதன் மூலம் ராம்சர் தலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், அதையொட்டியுள்ள தாக்கப்பகுதிகளும் பாதுகாக்கப்படும். ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லை மற்றும் தாக்கப்பகுதிகளை மிகவும் தாமதமாக வரையறை செய்து அவற்றை 2027ம் ஆண்டுக்கு பிறகு செயல்படுத்தப் படவிருக்கும் சென்னை மூன்றாவது பெருந்திட்டத்தில் சேர்க்கலாம்; அதுவரை தாக்கப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுவதாக தோன்றுகிறது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன். அதை உறுதி செய்யும் வகையில் தான் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.
சதுப்பு நில எல்லைகள் வரையறுக்கப்பட்டால், அவற்றை மாற்ற முடியாது. ஆக்கிரமிக்க முடியாது. மாசுபடுத்த முடியாது. இஸ்ரோ சதுப்பு நில வரைபடம் 2021 பட்டியலில் உள்ள 2.25 எக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழத்தின் 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்திற்குள் வரையறை செய்து தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2024ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள் ஆணையம் 2018ம் ஆண்டும் நவம்பர் 26ம் தேதி உருவாக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் கூட இதுவரை ஒரே ஒரு சதுப்பு நிலம் கூட 2017ம் ஆண்டின் சதுப்பு நில விதிகளின் கீழ் சதுப்பு நிலமாக சட்டப்படி அறிவிக்கை செய்யப்படவில்லை.
கடந்த மார்ச் 22, உலக தண்ணீர் நாளை முன்னிட்டு அம்மாதம் 29ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் பாமகவின் முயற்சியில், அந்தந்த ஊராட்சிகளின் நீர்நிலைகளை 2017ம் ஆண்டு சதுப்பு நில விதிகளின்படி அறிவிக்கை செய்யக்கோரும் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டன. ஆனால், அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு காரணமே பின்னாளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற சதித் திட்டம் தான் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வரும் நிலையில், அதை பாதுகாக்கும் வகையில் ரூ.2000 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் ஆணையிட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அனைத்தையும் அறிவிக்கை செய்ய வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.