சென்னை: அதிமுக அரசு அமைந்ததும், பள்ளிக் கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்தை அனுமதிக்கும் விவகாரத்தில், தவறிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பருவமழைக் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வடிநிலமாகவும், பல்லுயிர் பெருக்கத்துக்கு இதயமாகவும் விளங்குகிறது.
அதிமுக அரசு மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.165.68 கோடியில் 695 ஹெக்டேர் சதுப்பு நிலத்தில் ‘பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்பு திட்டம்’ ஒன்றை 2018-19-ல் செயல்படுத்த ஒப்புதல் வழங்கியது. “பள்ளிக்கரணை சதுப்புநிலம் ‘ராம்சார் ஒப்பந்தம்’ அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும்.
இதன்படி ‘ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்திலோ அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கி.மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை சிஎம்டிஏ அதன் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சதுப்பு நிலங்கள் உயிர்நாடியாகத் திகழ்கின்றன என்ற காரணத்தால், அவற்றை வேறுபயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நியதியாகும். இதை திமுக அரசு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை ‘பிரிகேட்’ என்ற கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் சுமார் 1250 குடியிருப்புகளைக் கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
சென்னையின் சுற்றுச்சூழலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்துக்கு பல்வேறு அரசுத் துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன என்பதை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அதிமுக கை கட்டி வேடிக்கை பார்க்காது. அதிமுக அரசு அமைந்தவுடன் தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.