“பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் பாரம்பரிய தற்காப்புக் கலை” – தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி யோசனை | Governor Ravi suggested to the government that traditional martial arts should be included in school and college curriculum

1275409.jpg
Spread the love

சென்னை: பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சிலம்பம், களரி உள்ளிட்ட பாரம்பரிய, தற்காப்புக் கலைகளை இடம்பெறச் வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி யோசனை தெரிவித்துள்ளார்.

‘எண்ணி துணிக’ என்ற தலைப்பில் பாரம்பரிய தற்காப்புக்கலை ஆசான்களுடனான ஆளுநரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை பாரதியார் அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், வாள்வீச்சு, மான்கொம்பு, சிலம்பம், குத்துவரிசை, களரி ஆகிய தமிழக பாரம்பரிய மற்றும் தற்காப்புக்கலை கலைஞர்கள் 50 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார்.

இவ்விழாவில் ஆளுநர் பேசியதாவது:பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்து இளைஞர்கள் அக்கலைகளை கற்க ஊக்கப்படுத்தி வரும் ஆசான்களை பாராட்டுகிறேன். நாம் எவ்வாறு நமது பாரம்பரியம், பண்பாடு மற்றும் இசையை நினைத்து பெருமைப்படுகிறோமா, அதேபோல் நமது பாரம்பரியக் கலைகளை எண்ணியும் பெருமைப்பட வேண்டும். ரிஷிகளாலும், சித்தர்களாலும் பரம்பரை பரம்பரையாக வளர்த்தெடுக்கப்பட்டு வரும் இக்கலைகள் வரும் காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும்.

பாரம்பரிய மற்றும் தற்காப்புக் கலைகள் இந்தியாவில் இருந்துதான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளன. அந்த வகையிலும் தற்காப்புக் கலைகளின் தாயாகமாக நம் நாடு திகழ்கிறது. இக்கலைகளை கற்றுக்கொள்ளும்போது உடலும், மனமும் ஒருமுகப்படும். உடற்கட்டுப்பாடும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும்.

இவ்வளவு சிறப்புமிக்க பாரம்பரிய, தற்காப்புக் கலைகளை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் வலியுறுத்துகிறேன். மேலும், பாரம்பரிய கலைகள் தொடர்பான ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கலைகளை தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கொண்டு செல்ல வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில் பாரம்பரிய கலைகளை குறைத்து மதிப்பிடும் போக்கு நிலவுகிறது. இந்தநிலை மாற வேண்டும். தேசத்தின் சொத்துகளாக திகழும் பாரம்பரிய, தற்காப்புக் கலை கலைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

முன்னதாக, தமிழகம், கேரளம் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் வாள்வீச்சு, மான்கொம்பு, சிலம்பம், குத்துவரிசை, களரி கலைகளை நிகழ்த்தி ஆளுநர் மற்றும் பார்வையாளர்களை வியக்க வைத்தனர்.

உலக சிலம்பம் விளையாட்டுக்கழக தலைவர் எஸ்.சுதாகரன், துணை தலைவர் கே.திலகவதி, பொதுச்செயலாளர் கீதா மதுமோகன், தமிழ்நாடு குத்துவரிசை விளையாட்டுக்கழக நிறுவனர் கழுகுமனை சந்திரசேகர், உலக சிலம்பம் விளையாட்டுக்கழக தலைமை தொழில்நுட்ப இயக்குநர் சித்தர் துரைசாமி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *