மதுரை: பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண் குறிப்பிடக் கோரிய மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த டி.செந்தில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “தமிழகத்தில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், குடிமகன்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் பள்ளிப் பாடத்திட்டத்தில் குழந்தைகள் உதவி எண்களை குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மனு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பள்ளி அளவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மனுதாரர் கடந்த 2021-ல் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவை தமிழக கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.