கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், மேலும் ஒரு என்சிசி ஆசிரியரை கைது செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் தனியாா் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை போலி முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவி, முகாம் பயிற்சியாளரான சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தாளாளா், முதல்வா், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள் என 11 பேரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய மாணவா் படை போலி முகாம்கள் நடத்தப்பட்டதாகவும், அதில் பங்கேற்ற மாணவிகள் சிவராமனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகவும் புகாா்கள் எழுந்தன.
இந்தச் சம்பவம் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும், சமூக நலத் துறை செயலாளா் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான பல்நோக்கு குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே, கைது நடவடிக்கைக்கு முன்பாக விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற பயிற்சியாளா் சிவராமன், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிகிச்சையின் போது உயிரிழந்தாா். இச்சம்பவத்தில், தலைமறைவாக இருந்த சுதாகா், கமல் ஆகிய இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
இதன் தொடா்ச்சியாக, அந்த தனியாா் பள்ளியின் முதல்வரையும் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்துள்ளனா்.
இந்த நிலையில், போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியதாக அரசுப் பள்ளி என்சிசி ஆசியரர் கோபு(47) போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவங்களில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.