பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்க தமிழக அரசு அறிவுறுத்தல் | TN School Education dept recommends for seating arrangement in schools

1369129
Spread the love

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள சில பள்ளிகளில் பின்வரிசை, முன்வரிசை என்ற பாகுபாட்டைக் களையும் பொருட்டு அரைவட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை அமைக்கப்பட்டது தொடர்பான செய்திகள் வைரலாகின. இந்நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இணைக்கப்பட்ட படத்தில் ‘சம இருக்கை, சமூக நீதி’ என்ற வாசகம் சேர்க்கப்படுள்ளது.

இந்த இருக்கை வசதி பற்றி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டி ஒன்றில், “பின் இருக்கையில் படிப்பவர்கள் நன்றாக படிக்க மாட்டார்கள், முன் இருக்கையில் படிப்பவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்ற வகையில் எல்லாம் இருக்கை அமைப்பை மாற்றும் முடிவை எடுக்கவில்லை. பின் வரிசையில் அமர்ந்தவர்கள் கூட பெரும் சாதனையாளர்களாக, ஒரு வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்போது இந்த மாதிரியான வடிவமைப்பில் இருக்கைகள் இருந்தால் அது மாணவர்கள் – ஆசிரியர்கள் இடையேயான தொடர்பை மேம்படுத்துமா என்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

மாணவர்கள் மத்தியில் சமத்துவம் ஏற்படுத்தும் என்றால், இது நல்ல முயற்சியே. எதிர்காலத்தில் ஒரு போர்டு மீட்டிங்கில் அமரும்போது ஏற்படும் உணர்வை மாணவர்கள் இப்போதே பெறட்டுமே. மாற்றங்கள் நல்லதாக இருந்து அது எந்த மாநிலத்தில் நிகழ்ந்தாலும் நாம் அதை பின்பற்றலாம். இந்த முயற்சி எப்படி பலனளிக்கிறது என்று ஆசிரியர்கள் முயற்சிக்கட்டும்” என்றார்.

இருக்கை மாற்றம் குறித்து பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ள வேளையில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாசிக்க > கேரள பள்ளிகளில் ‘பெஞ்ச்’ புரட்சி – ‘ட்ரெண்ட்’ வகுப்பறைக்கு வித்திட்ட திரைப்படம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *