திண்டுக்கல்: பழங்குடியினரின் மொழி, பண்பாடுகளைப் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.மதிவேந்தன் கூறினார்.
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் 2 நாட்கள் நடைபெறும் உலக பழங்குடியினர் தின விழாவை ஆதிதிராவிடர்நலத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் நேற்று தொடங்கிவைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் செயலாளர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் வரவேற்றார். பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் அண்ணாதுரை, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழநிஎம்எல்ஏ செந்தில்குமார், மாநில பழங்குடியினர் நல வாரியத் தலைவர் கனிமொழி முன்னிலை வகித்தனர்.
பழங்குடி மக்களுக்கான ‘தொல்குடி’ இணையதளத்தை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கிவைத்துப் பேசியதாவது: தொல்குடி திட்டத்தின் முக்கிய நோக்கம் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களை கல்வி,கலாச்சாரம், பொருளாதார மேம்பாடு அடையச் செய்வதாகும். பழங்குடியின மக்களின் வேளாண்பொருட்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக உருவாக்கி,சந்தைப்படுத்த உதவிகள் செய்யப்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பது, எதிர்காலத்தை தீர்மானிப்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பழங்குடியினரின் மொழி மற்றும் பண்பாடுகளை இணையவழியில் பாதுகாக்க ரூ.2 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளைப் பாதுகாப்பதன் மூலம் இயற்கைச் சூழலையும், அதன் மூலம் பூமித் தாயையும் பாதுகாப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இதையொட்டி நடைபெற்ற கண்காட்சியில் பழங்குடி மக்களின் புகைப்படம் மற்றும் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்கள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்றன.