சென்னை / மதுரை: பழநி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத நம்பிக்கைகளுக்கு திமுக அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை என்று தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள். பழநி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய 7 முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த 1,298 பணியாளர்கள் பணிநிரந்தரமும், 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனமும் செய்யப்பட்டுள்ளனர். திருக்கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், ஊக்கத்தொகை உயர்வு செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கு தொகை உயர்வு இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
ஏதோ திடீர் என்று பழநியில் மாநாடு நடத்தவில்லை. இப்படிப்பட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டுதான் பழநியில் இந்த மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு இந்த அரசு எப்போதும் தடையாக இருந்தது இல்லை.
திமுகவின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான் பழுத்த ஆத்திகரான அன்றைய முதல்வர் பனகல் அரசரால் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பண்பாட்டுச் சின்னங்களான கோயில்கள் முறையாக பாதுகாக்கப்படவேண்டும். முறையாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று சீரோடும், சிறப்போடும் கோயில்கள் இயங்க அடித்தளம் அமைத்தது அந்த சட்டம்தான்.
கடந்த மூன்றாண்டு காலத்தில் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள், ரூ.3 ஆயிரத்து 776 கோடியில் 8 ஆயிரத்து 436 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. ரூ.5 ஆயிரத்து 577 கோடி மதிப்புள்ள 6 ஆயிரத்து 140 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது. 756 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள். 4 ஆயிரத்து 189 ஏக்கர் நிலம், மீண்டும் கோயில் பெயரில் பட்டா செய்யப்பட்டிருக்கிறது.
அந்த சாதனைகளுக்கு மகுடம் வைத்ததுபோல, பழநியில் நடைபெறும் இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமயஅறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப்பெறும். ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெறவேண்டும். கோயில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும். அறத்தால் உலகம் நன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முருகனடியார்கள் பெயரில் இன்று விருது: பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். இந்த 2 நாள் மாநாட்டின் முதல் நாளான நேற்று காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து, 100 அடி கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார்.
கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். வேல் கோட்டத்தை திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், செந்தில்குமார் எம்எல்ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். 3-டி திரையரங்கில் பா.விஜய் இயக்கிய முருகனின் பெருமைகள் கூறும் பாடல் மற்றும் விஆர் (விர்ச்சுவல் ரியலாலிட்டி) மூலம் அறுபடை வீடுகளை அமைச்சர்கள், ஆதீனங்கள் கண்டு ரசித்தனர்.
கலைமாமணி சீர்காழி சிவசிதம்பரம் இறை வணக்க பாடலை பாடும்போது, அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது, காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்க தயாராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும் எழுந்து நின்றார். இறைவணக்க பாடல் முடிந்ததும், முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதப் பைகள் வழங்கப்பட்டது. மாநாட்டில் கருத்தரங்கம், நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு 3 வேளையும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.
2-வது நாளான இன்று (ஆக.25) முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றியவர்களுக்கு 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாநாட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது.