பழநி: பழநியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், தனது மகன் அகிரா நந்தனுடன் இன்று வெள்ளிக்கிழமை (பிப்.14) வந்தார். பழநி அடிவாரத்திலிருந்து ரோப் காரில் மலைக்கோயிலுக்கு வந்தார். அங்கு இணை ஆணையர் மாரிமுத்து, துணை முதல்வரைப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு துணை முதல்வர் தனது மகனுடன் தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்தார். அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னிதியில் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர், போகர் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபட்டார். சுவாமிக்குப் படைக்கப்பட்ட நைவேத்யமான சர்க்கரைப் பொங்கல், புளியோதரை துணை முதல்வர் சாப்பிட்டார். பின்னர், ரோப் கார் மூலம் அடிவாரத்துக்குச் சென்று தனியார் விடுதியில் தங்கினார். மதிய உணவுக்குப் பின் காரில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பழநியிலிருந்து திருப்பதிக்குத் தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன்.
திருப்பதி லட்டு விவகாரத்தில் தவறு நடப்பதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து கூறி வருகிறேன். தவறு செய்தது யார் எனத் தெரிய வந்துள்ளது. கடவுளிடம் யாரும் இப்படிச் செய்யக் கூடாது. எப்போதும் எனக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வது இல்லை. தமிழகத்துக்கும், மக்களுக்கும், தேசத்துக்கும் நல்லது நடக்கட்டும்” என்று அவர் கூறினார்.