பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை!  | High Court Stay on defamation case 

1354315.jpg
Spread the love

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பியான தயாநிதி மாறன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், முன்னாள் முதல்வரான பழனிசாமி்க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தயாநிதி மாறன் தொகுதி நிதியை முறையாக செலவிடவில்லை என நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே தேர்தல் பிரசாரத்தின் போது பேசியதாகவும், இது அவதூறாகாது என்பதால் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு எதிராக அரசு இணையதளங்களில் உள்ள தரவுகளின் அடிப்படையிலும், நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையிலுமே மனுதாரர் அவ்வாறு பேசினார். மற்றபடி அவர் வேறு எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றார்.

பதிலுக்கு தயாநிதி மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ”தயாநிதி மாறன் தொடர்பான அந்த செய்திக்கு சம்பந்தப்பட்ட நாளிதழ் வருத்தம் தெரிவித்து விட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் மனுதாரர் வேண்டுமென்றே தயாநிதி மாறன் மீது குற்றம் சாட்டி பேசியது அவதூறானது,” என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் தயாநிதி மாறன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்.4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை பழனிசாமி்க்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *