திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்பட்ட பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, பழனி திருக்கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படும் பொருள்களிலும், திருப்பதி லட்டை போலவே, கலப்படப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக திரைப்பட இயக்குநர் மோகன். ஜி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குநரான மோகன். ஜி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவித்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க பழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை ராயபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்த கோகனை இன்று(செப்.24) காலை திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் திருச்சிக்கு அழைத்து செல்லப்படுவார் என்றும், அங்கு அவரிடம் விசாரணை நடைபெறும் எனவும் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.