சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த குழு அமைக்க தேவையில்லை. அரசு கொள்கை முடிவு எடுத்தாலே போதும் என்று தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசு தேரத்ல் வாக்குறுதியை அமல்படுத்துவதை விட்டுவிட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய குழு அமைத்திருப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். குழு அமைப்பதே காலம் கடத்துவதற்குத்தான் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.
அதுவும் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 9 மாத அவகாசம் வழங்கியிருப்பது, பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசு கொள்கை முடிவு எடுத்தாலே போதும். எனவே, முதல்வர் அமைத்துள்ள அலுவலர்கள் குழுவை உடனடியாக கலைத்துவிட்டு, தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.