தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பழைய குற்றால அருவி அமைந்துள்ளது.
இங்கு அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்புக் கம்பிகள், கழிவறைகள், தார் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
சீரமைப்புப் பணிகள் ஒரு மாதமாக நீடித்து வரும் நிலையில், விரைந்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கில் ஒரு சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பைக் கணக்கில் கொண்டு வனத்துறை நேரக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின், அருவிப் பகுதி கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இவ்வளவு பெரிய பகுதியைப் பராமரிக்க தேவையான நிதி வனத்துறையிடம் இல்லாததால் சிக்கல் தொடர்ந்து வருகிறது.