புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, மாப்பிள்ளை சம்பா மற்றும் பொதுவிநியோகத் திட்ட அரிசி போன்றவற்றைச் சமைத்து, மண் பானையில் 8 முதல் 14 மணி நேரம் வரை புளிக்க வைப்பதன் மூலம், உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் உருவாகின்றன.
இந்தப் புளிப்புச் செயல்முறையில் புரோபயாட்டிக்ஸ் மற்றும் போஸ்ட்பயாட்டிக்ஸ் எனப்படும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாகுகின்றன.
இது குறித்து டாக்டர் ஃபாரூக் அப்துல்லாவிடம் பேசினோம்…
“பழைய சோறானது நொதித்தல் முறைக்கு உள்ளாகும்போது Lactobacillus, Lactococcus lactis, Weisella, Pediococcus போன்ற நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கத்தைச் சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
நீண்ட காலமாகக் குடலில் ஏற்படும் அழற்சி (inflammation) காரணமாக உருவாகும் Inflammatory Bowel Disease (IBD) நோய் மற்றும் வாய் முதல் மலவாய் வரை செரிமானப் பாதையின் எந்தப் பகுதியிலும் அழற்சி ஏற்படுத்தி உருவாகும் Crohn”s Disease போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அளவு பழைய சோறு கஞ்சியை எடுத்துக் கொண்டால் நல்ல பாக்டீரியாக்களின் விளைவுகளின் மூலம் நோயின் தன்மையையும் அறிகுறியையும் கட்டுப்படுத்தலாம்.
சாதாரணமாக அரிசியில் இருக்கும் இரும்புச்சத்தை விட நொதிக்க வைக்கும்போது அவை 20 மடங்கு அதிக இரும்புச்சத்தாக உயர்கிறது. பொருளாதார நலிவுற்ற மக்கள் மற்றும் கர்ப்பகால இரத்தக்குறைபாடு (anaemia) பிரச்சினையைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் சரியான அளவு, அதாவது தினசரி 100 கிராம் அளவு எடுத்துக் கொள்வதால் இரும்புச் சத்து உயரும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கவனிக்க வேண்டியது, இதனை கூடுதலான உணவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், மாத்திரைகளுக்கு மாற்றாக அல்ல.