கரூரில் செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “இந்தியாவிலே இருக்கின்ற தொழிற்சாலைகளில் உழைக்கின்ற மகளிர், 45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில்தான் பணிபுரிகிறார்கள் என்ற அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்தியதால், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மகளிருக்கான விடியல் பயணத்திட்டம், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.
இப்படி, தமிழகத்தில் ஒரு பொற்கால ஆட்சி வழங்கி வரும் தி.மு.க அரசு, தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரம் சிறப்பு முகாம்களை `உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற்று தீர்வு வழங்கி வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தி.மு.க தான் தனக்கு போட்டி என பேசி வருவது குறித்து கேட்கிறீர்கள். அரசு நிகழ்ச்சி என்றாலும் கூட செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நான் பதில் அளிக்கின்றேன். தமிழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியானாலும், ஏற்கனவே உள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்கள் போட்டியாக தி.மு.க-வை தான் கூறுகிறார்கள். வேறு யாரையும் போட்டியென அரசியல் கட்சிகள் கூறுவதில்லை. அதற்கு காரணம், தமிழக மக்கள் மனதில் திராவிட முன்னேற்றக் கழகம் வலுவாக இடம் பிடித்துள்ளது.