பவானி சாகர் அணைக்கான நீர் வரத்து 16,000 கன அடியாக அதிகரிப்பு – கொடிவேரி அணையில் குளிக்க தடை | Bhavani Sagar dam has 16,000 cubic feet of water, so bathing is prohibited in Kodiveri

1334611.jpg
Spread the love

ஈரோடு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி மற்றும் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.5 டிஎம்சி நீரினைத் தேக்க முடியும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பவானிசாகர் அணைக்கு இன்று காலை 16 ஆயிரத்து 539 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 92.35 அடியாகவும், நீர் இருப்பு 23.14 டிஎம்சியாகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் கன மழை: ஈரோடு நகரப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ததால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் பாதாளச்சாக்கடை நிரம்பி, மழைநீருடன், கழிவுநீர் வெளியேறியதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது.

கொடிவேரியில் தடை: ஈரோடு மாவட்டத்தில் குண்டேரிப்பள்ளம் அணையில் 54மி.மீ., ஈரோடு – 42மி.மீ., பவானிசாகர் – 41மி.மீ., சத்தியமங்கலம் – 22மி.மீ., நம்பியூர் 19மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்று (3ம் தேதி) தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணைக்குச் செல்லும் சாலைகளில் தடுப்புகள் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே கொடிவேரி தடுப்பணையில் நேற்று குளிப்பதற்காக வந்த கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த மாணவர் ஹரிராஜன் (20), திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த வடுகுபாளையத்தைச் சேர்ந்த அங்கப்பன் (36) ஆகியோர், ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி பலியாகினர். இது குறித்து பங்களாபுதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அணைகளின் நிலவரம்: ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை அதன் முழுக் கொள்ளளவை (41.75 அடி) எட்டி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், வரட்டுப்பள்ளம் அணையும் முழுக்கொள்ளளவை (33.46 அடி) எட்டியுள்ளது. 30.84 அடி உயரம் கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.51 அடியாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *