அரசு பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். கண்டக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உரிய அடையாள அட்டையை காட்டச்செய்து வயதினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கட்டணமில்லா பயணம்
இது தொடர்பாக போக்கவரத்து துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:&
நமது கழக புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் 5 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். 5 வயதிற்கு மேற்பட்ட 12 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு அரைக் கட்டணம் வசூலிக்க வேண்டும். குழந்தைகளின் வயது குறித்த சந்தேகங்கள் ஏற்படின், தக்க பிறந்த நாள் சான்று அல்லது ஆதார் அடையாள அட்டை மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, 01.01.2020 அன்று பிறந்த குழந்தைக்கு 31.12.2024 அன்று வரை பயணக் கட்டணம் வசூலிக்கத் தேவை இல்லை.
இருந்தபோதிலும், நமது நடத்துனர்கள் மேற்படி அறிவிப்பினை பொருட்படுத்தாமல், கட்டணம் வசூலிப்பதாகவும், பயணிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகிறது.
ஒழுங்கு நடவடிக்கை
எனவே, நடத்துனர்கள், மேற்படி அறிவிப்பினை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வண்ணம் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இதுகுறித்து புகார்கள் பெறப்பட்டால், சம்மந்தப்பட்ட நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.