பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் ஒரு பஸ்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலாவாக உத்திரபிரததேச மாநிலம் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு இறுதியாக மதுரா,பிருந்தாவனத்தை பார்த்தனர். இதைத்தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இரவுஅவர்கள் உற்சாகத்துடன் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
பஸ்சில் பற்றிய தீ
இன்று(சனிக்கிழழை) அதிகாலை 1.30 மணியளவில் அந்த சுற்றுலா பஸ் ஹரியானாவில் உள்ள குண்டலி-மனேசர்–பல்வால் விரைவு சாலையில் நூஹ் அருகே வந்த போது திடீரென தீப்ப்பற்றியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
பதட்டத்தில் ஒரே நேரத்தில் அனைவரும் பஸ்சின் படிக்கட்டு வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் ஜன்னல் கண்ணாடி மற்றும் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே வந்தனர். இதற்குள் தீ மளமளவென பஸ்முழுவதும் பரவியது.
9 பக்தர்கள் கருகி பலி
இந்த தீயில் சிக்கி மொத்தம் 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களில் 6 பேர் பெண்கள், 3 பேர் ஆண்கள் ஆவர். மேலும் 15 பேர் தீயில் சிக்கி காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் பற்றிய தீயை அணைத்தனர்.
எனினும் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. பலியான 9 பேரின் உடல் களும் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் தீக்£யம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீவிபத்து நடந்தது எப்படி
குண்டலி-மனேசர்-பல்வால் விரைவு சாலையில் வந்த போது முதலில் பஸ்சின் பின்பகுதியில் தீப்பற்றி உள்ளது. இதனை கவனித்த பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வேகமாக வந்து பஸ்டிரைவரை எச்சரித்து உள்ளார். உடனடியாக பஸ்சை நிறுத்தி தூக்கத்தில் இருந்த பக்தர்களை எழுப்பி இறங்குமாறு தெரிவித்து உள்ளார். தூக்ககலக்கத்தில் இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் தீ மளமளவென் பஸ் முழுவதும் பரவி உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எச்சரிக்கை விடுக்காமல் இருந்து இருந்தால் பஸ் சென்ற வேகத்தில் தீ பரவி அதில் இருந்த அனைவரும் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக மற்றவர்கள் உயிர் தப்பி உள்ளனர். ஆன்மிக சுற்றுலா வந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என்று தெரிகிறது.
தீப்பிடித்தது எப்படி ?
தீவிபத்து பற்றி தகவல் தெரிவித்தும் சுமார் 3 மணி நேரம் கழித்து பஸ் முற்றிலும் எரிந்து நாசமான பிறகு தீயணைப்பு துறையினர் வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதேபோல் போலீசாரும் நீண்ட நேரத்திற்கு பின்னரே வந்தனர் என்றனர். பஸ்சில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.