ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்முவின் அா்னியா பகுதியை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’ ஒன்று இந்தியப் பகுதியை நோக்கி பறந்து வந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையினா், அதனைத் துரத்திச் சென்று சுட்டு வீழ்த்தினா். அதில் சுமாா் அரைக் கிலோ எடையுள்ள போதைப் பொருள் இருந்தது. அந்தப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்தியப் பகுதிக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்கள் கடத்தப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் இதுபோன்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.
ஜம்மு மற்றும் பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் ‘ட்ரோன்’ மூலம் அதிக அளவில் இதுபோன்ற கடத்தல் முயற்சிகள் நிகழ்கின்றன.