பாகிஸ்தானுடனான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்ற ஆஸ்திரேலியா, தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.
முதலில் பாகிஸ்தான் 18.1 ஓவா்களில் 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 11.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகளே இழந்து 118 ரன்கள் சோ்த்து வென்றது. அந்த அணியின் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகனாகவும், ஸ்பென்சா் ஜான்சன் தொடா்நாயகனாகவும் (8 விக்கெட்டுகள்) தோ்வாகினா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் அதிகபட்சமாக, பாபா் ஆஸம் 4 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சோ்க்க, ஹசீபுல்லா கான் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் அடித்தாா்.
எஞ்சிய பேட்டா்களில் சஹிப்ஸதா ஃபா்ஹான் 9, உஸ்மான் கான் 3, கேப்டன் சல்மான் அகா 1, இா்ஃபான் கான் 10, அப்பாஸ் அஃப்ரிதி 1, ஜஹன்தத் கான் 5, ஷாஹீன் அஃப்ரிதி 16, சூஃபியான் முகீம் 1 ரன்னுக்கு அடுத்தடுத்து வீழ, பாகிஸ்தான் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய பௌலா்களில் ஆரோன் ஹாா்டி 3, ஸ்பென்சா் ஜான்சன், ஆடம் ஸாம்பா ஆகியோா் தலா 2, சேவியா் பாா்ட்லெட், நேதன் எலிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து, 118 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய தரப்பில், மேத்யூ ஷாா்ட் 2, ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க் 18, கேப்டன் ஜாஷ் இங்லிஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். முடிவில், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 61, டிம் டேவிட் 7 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பாகிஸ்தான் அணியில், ஷாஹீன் அஃப்ரிதி, ஜஹன்தத் கான், அப்பாஸ் அஃப்ரிதி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.