உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவிய நிலையில், இன்று பாகிஸ்தானை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கை இந்திய மகளிரணி தொடங்கியுள்ளது.
மகளிர் டி – 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மற்றும் துபையில் நடைபெற்று வருகிறது.
துபை சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ஆடியது. இந்திய மகளிரின் அபார பந்துவீச்சால், தொடக்க ஆட்டக்காரர்களான மூபீனா அலி – குல் ஃபெரோசா சொற்ப ரன்களில் வெளியேறினர். அதற்கடுத்து வந்த வீராங்கனைகளும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
முபீனா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், நிடா தார் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதுவே பாகிஸ்தான் மகளிர் அடித்த அதிகபட்ச ரன்களாகும். அதற்கடுத்து வந்த வீராங்கனைகளான அலியா ரியாஸ், ஃபாத்திமா சனா, தூபா ஹாசன், சைதா அரோப் ஷா, நஷ்ரா சாந்து ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிரணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக ஷபாலி வர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தாலும், அதற்கடுத்து வந்த ஜெமிமாவும் (23), கேப்டன் ஹர்மன் பிரீத் கெளரும் (29) ஜோடி சேர்ந்து ரன்களைச் சேர்த்தனர்.
ரிச்சா கோஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தீப்தி சர்மா – சஞ்சனாவுடன் சேர்ந்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர்.