'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' – எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது – என்ன நடந்தது?

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இளைஞரை அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.

இது குறித்து காஜுவாலா காவல் நிலைய பொறுப்பாளர் (SHO) ஹர்பால் சிங் கூறுகையில், “பிரசாந்த் வேடம் என்ற அந்த நபர் பொதுவெளியில் வெளிப்படையாகப் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யப் போவதாகப் பேசிக்கொண்டிருந்தார்.

மேலும், எல்லை தாண்டிச் செல்ல எளிதான வழியையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். ராணுவப் புலனாய்வுத் துறையினர் இந்தத் தகவலைப் பெற்று, அவரை விரைவாகக் கைது செய்ய விரைந்தனர்” என்று தெரிவித்தார்.

Khajuwala
Khajuwala

கைது செய்யப்பட்டவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாந்த் வேடம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் விசாகப்பட்டினத்தில் இருந்து பயணம் செய்து, பிகானேரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு வந்துள்ளார்.

இவர் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்ப முயன்றிருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆம் பாகிஸ்தானுக்கு செல்வது இவருக்கு முதன்முறை அல்ல. எனினும், அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது விசாரணையின் முடிவிலேயே உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரசாந்திடம் இப்போது ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசாந்த் இதற்கு முன்பு 2017-ம் ஆண்டும் பிகானேரில் உள்ள கர்னி போஸ்ட் வழியாகப் பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர், 2021-ம் ஆண்டு வரை அவர்களின் காவலில் இருந்துள்ளார். அதன் பிறகு, அவர் அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

அட்டாரி - வாகா எல்லை
அட்டாரி – வாகா எல்லை

இதற்கு பிறகும், அவர் மீண்டும் அதே பயணத்தை மேற்கொள்ள முயன்றது, அவர் மீது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவர் சொல்பவற்றை ராணுவம் நம்பத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஹர்பால் சிங் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் இது குறித்து மேலும் கூறுகையில், “தான் பாகிஸ்தானில் உள்ள ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவர் சிறையில் வேறு ஓர் அறையில் இருந்ததாகவும் பிரசாந்த் கூறுகிறார். அந்தப் பெண்ணைச் சந்திக்கத்தான் தான் மீண்டும் பாகிஸ்தானுக்குப் போவதாக பிரசாந்த் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அவர் இன்னும் அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, பிரசாந்திற்கு சில மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக அவரது சகோதரர் எங்களிடம் தெரிவித்தார். அவரது சகோதரர், குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் இருந்து பிகானேருக்குப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர்கள் திங்கட்கிழமை மாலை வந்து சேருவார்கள். அதன்பிறகே இந்தச் சம்பவங்கள் தெளிவாகும், நாங்கள் அவர்களுக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *