பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஆசிம் முனீர், இந்த வாரம் மீண்டும் அமெரிக்கா செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நான்கு நாள்கள் போர் தாக்குதல்கள், முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதற்கு தானே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகின்றார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இந்தத் தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர்; தற்போது 2-வது முறையாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வாரம், அவர் அமெரிக்கா செல்வார் எனக் கூறப்படும் நிலையில், இந்தப் பயணத்தில் அந்நாட்டின் உயர் தலைவர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதுகுறித்து வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜூன் மாதம், ஆசிம் முனீர், 5 நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, வெள்ளை மாளிகையில் அவருக்கு அதிபர் டிரம்ப் விருந்தளித்தார்.
பெரும்பாலும், ஒரு நாட்டின் தலைவருக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த மரியாதையானது, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீருக்கு வழங்கப்பட்டது, சர்வதேச அளவில் பேச்சுப்பொருளானது.
இதையும் படிக்க: புதின் இந்தியா வருகை! டிரம்ப்புக்கு எதிராக இந்தியா – ரஷியா கூட்டு சேருமா?