பாகிஸ்தான்: கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 11 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு தரப்பில் கூறப்பட்டதாவது, டிச.17 மற்றும் 18 ஆகிய இரு நாள்களில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளினால் மொத்தம் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் முதலில் டேங்க் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையினால் அங்கு 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க: காஸா: மேலும் 38 போ் உயிரிழப்பு
இதனைத் தொடர்ந்து வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் 2 பேரும், மொஹமந்து மாவட்டத்தில் 2 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய இரு மாகாணங்களில்தான் பயங்கரவாத செயல்களினால் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.