பிஹாரின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இமாலய வெற்றிக்கு எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே?
பிஹாரில் இண்டியா கூட்டணி எடுபடவில்லை. கூட்டணியின் பெயரையும் மகாகட்பந்தன் என மாற்றினர். அவர்களது தோல்வி அங்கேயே தொடங்கிவிட்டது. தேர்தலுக்கு முன்பு பிஹாரில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றிபெறும் என தெரிந்தவுடன், புதிதாக ஏதாவது பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே எஸ்ஐஆரை கையில் எடுத்து பூதாகரமாக்கினர். எஸ்ஐஆர்தான் அவர்களது பிரச்சாரத்தின் மையப்பகுதியாக இருந்தது. மக்களின் குறைகளையோ, மக்களுக்கு என்ன செய்ய போகிறோம் என்பதையோ அவர்கள் பேசவே இல்லை. எஸ்ஐஆரை ஆயுதமாக்க நினைத்தனர். ஆனால், அதுவே அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது.
அதேநேரம், கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், உள்ளூர் பிரச்சினைகளை சரியாக அணுகுவதிலும் பாஜக மிகத் தெளிவாக இருந்தது. இதனால், வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சிகள் வாக்குத் திருட்டு என பொய்யாக குற்றம்சாட்டுகின்றனர். பிஹாரில் முஸ்லிம்கள், யாதவர்களின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தியதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்கிறார்களே?
இது தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் திட்டம். மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாகவே பிஹாரில் செயல்படுத்தப்பட்டது. இடைத்தரகர்கள் இல்லாமல், பெண்களிடம் இத்திட்டம் சரியான முறையில், சென்று சேர்ந்துள்ளது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாத எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.
அதேபோல, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அவர்கள் அளித்த வாக்குறுதி சாத்தியமற்றது என்று மக்களுக்கு தெரிந்துவிட்டது. பிஹாரில் லாலு பிரசாத்தின் காட்டாட்சி கொடுமைகள் இன்னும் மக்கள் மனதில் நீங்கவில்லை. அதனால்தான் மக்கள் பாஜகவுக்கு அமோக வெற்றியை கொடுத்துள்ளனர். ராகுல்காந்தி என்ற படகில், எந்த மாநிலத்தில் யார் ஏறினாலும் மூழ்கடிக்கப்படுவார்கள்.
பிஹாரில் பாஜக அதிகம் கவனம் செலுத்திய மக்கள் பிரச்சினைகள் எது?
பிஹாரில் முன்பு 2 சதவீத வீடுகளுக்கு மட்டும்தான் தண்ணீர் கிடைத்தது. ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, 6 ஆண்டுகளில் 100 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தியை பெருக்குவதற்கான பணிகளையும் பாஜக அரசு செய்துள்ளது.
சாலை வசதி 140 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பிஹாரில் சாலை இல்லாத பகுதிகளையே பார்க்க முடியாது. 1.17 லட்சம் கி.மீ. நீளத்துக்கு பாஜக அரசு புதிதாக சாலைகளை அமைத்துள்ளது. 59 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. குடியிருக்க வீடு, குடிநீர், சாலை வசதி, மின்சாரம் ஆகிய மக்களின் அடிப்படை வசதிகளைத்தான் பிஹாரில் பாஜக கையில் எடுத்து அதிக கவனம் செலுத்தியது.
நாடு முழுவதும் வெற்றிவாகை சூடும் பாஜகவை தமிழக மக்கள் தொடர்ந்து புறக்கணிக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற பொய்யை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கட்டமைத்து வருகின்றன. இப்போது, அந்த பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது. மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தபோது, பாஜக தனித்து களம் கண்டது. அப்போது, பாஜக மட்டும் 11.5 சதவீதம் வாக்குகளையும், பாஜக கூட்டணி 18.5 சதவீதம் வாக்குகளையும் கைப்பற்றியது. இது சாதாரண விஷயம் அல்ல. பாஜக என்ற வார்த்தையை சொல்லாமல், தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இந்த முறை மிகப்பெரிய அளவில் மாற்றம் இருக்கும். எங்களது அடுத்த வெற்றி இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான்.
தமிழக பாஜகவில் அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் இரட்டைத் தலைமை போல செயல்படுவது குழப்பமாக இல்லையா?
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அவ்வாறு தெரியலாம். அண்ணாமலை அவரது பாணியில் கட்சிக்கு வலுசேர்ப்பார். நயினார் நாகேந்திரன் அவ
ரது பாணியில் கட்சிக்கு வலு சேர்க்கிறார். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் பாஜகவில் எல்லோருடைய நோக்கமும்.
தேர்தல் ஆணையம், சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்ற துறைகளை எதிர்க்கட்சிகளை அழிக்கும் வகையில் மத்திய அரசு ஏவிவிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறதே?
இவை எதுவும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பவை அல்ல. சுதந்திரமாக செயல்படும் அமைப்புகள். தவறு செய்து பாதிக்கப்பட்டவர்கள் இதுபோல குற்றம் சாட்டுவது வழக்கம்தான். ஊழல் பட்டியலில் திமுகவின் ஒவ்வொரு அமைச்சர்களும் சேர்ந்து கொண்டிருக்கின்றனர். நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இதை நாங்கள் விடப்போவதில்லை. திமுக அமைச்சர்களின் ஒவ்வொரு ஊழலையும் பாஜக வெளிக்கொண்டு வருகிறது. தொடர்ந்து இதை பாஜக செய்யும்.
அதிமுக – பாஜக மட்டுமே உள்ள உங்கள் அணியால், வலுவான ஆளுங்கட்சியாக உள்ள திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் தோற்கடிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
பிஹார் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸின் நிலைமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ‘கூட்டணி ஆட்சி வேண்டும்.. அதிகாரம் வேண்டும்’ என்றவர்கள் அனைவரும் இனி ‘சைலன்ட் மோடு’க்கு போய்விடுவார்கள். எனவே, தமிழகத்தில் கூட்டணியில் நிறைய மாற்றங்கள் வரும். அதிமுக – பாஜக கூட்டணியிலும், அதிக பலம் கொண்ட வேறு பல கட்சிகளும் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் வலுவான கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி மாறும். மேலும், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது. போதைக் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. திமுக அரசு மீது நம்பிக்கையின்றி, நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கையும் சிபிஐயிடம் ஒப்படைக்கிறது. அரசு செயலிழந்துவிட்டதற்கு இதுவே அடையாளம். இதுபோல தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள், திமுக ஆட்சியின் மீதான மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.
பாஜக – அதிமுக தலைவர்கள் கூட்டணிக்கு அழைத்தாலும், விஜய்யின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையே?
சூழ்நிலைகள் மாறும்போது எல்லாமே மாறும். பிஹார் தேர்தல் முடிவுகள் பலரையும் மனமாற்றம் செய்யும்.