பாஜகவின் மதுக்கடை முற்றுகை போராட்டத்துக்கு திருமாவளவன் வரவேற்பு | Thirumavalavan welcomes BJP protest

1354691.jpg
Spread the love

தமிழக பாஜக சார்பில் நடைபெற்ற டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம். பிரதமர் மோடி, இந்த மாதம் கடைசியில் இலங்கை செல்ல இருக்கிறார். அப்போது அவர், தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசவேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்துவோம்.

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை வீட்டு காவலில் வைத்திருப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம்.

மதுபானம் முழுவதுமாக தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அந்தவகையில் பாஜகவின் இந்த போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரம், அரசியல் காரணங்களுக்காக, அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கும் யுக்தியாக பாஜகவினர் இதை கையாண்டால், அவர்களால் எந்த முன்னேற்றத்தையும் காண முடியாது.

மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களிலும் பாஜகவினர் மது ஒழிப்பை முன்னிறுத்தினால், அதை நாம் முழுமனதோடு வரவேற்கலாம். பாராட்டலாம்.

திமுகவின் கூட்டணி கட்சியாக இருந்தாலும், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிப்படி, மது ஒழிப்பு கொள்கையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாங்களும் வலியுறுத்துகிறோம். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *