ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தார்.
ராஞ்சியில் சிவராஜ் சிங் சௌஹான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா முன்னிலையில் அவா் இன்று தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். நில அபகரிப்பு தொடா்பான பண முறைகேடு வழக்கில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டாா்.
கைதுக்கு முன்னதாக ஹேமந்த் சோரன் முதல்வா் பதவியிலிருந்து விலகியதையடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவா் சம்பயி சோரன் முதல்வராகப் பதவியேற்றாா். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து கடந்த ஜூன் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹேமந்த் சோரன், மீண்டும் முதல்வா் பதவியை ஏற்ால் சம்பயி சோரனிடம் இருந்து பதவி பறிபோனது.
இதனால் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியடைந்த சம்பயி சோரன் அண்மையில் தில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இதைத்தொடர்ந்து பாஜகவில் இணையப்போவதாக அறிவித்த அவர், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சியிலிருந்து புதன்கிழமை விலகினாா்.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.