பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி | Minister Senthil Balaji slams opposition parties

1342559.jpg
Spread the love

கரூர்: பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பொதுமக்களை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று (டிச.08) நடைபெற்றது. கரூர் மாநகராட்சி 47-வது வார்டு கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் கோயில் அருகில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, எம்எல்ஏக்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி “துணைமேயர் ப.சரவணன் இப்பகுதிக்கு செய்த பணிகளை தெரிவித்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் அனைத்து நிகழ்ச்சிகளும் இங்கு தான் தொடங்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் கரூர் மாநகராட்சியில் விடுப்பட்ட பகுதிகளில் ரூ.476 கோடியில் புதைசாக்கடை பணிகள், ரூ.113 கோடியில் புதிய காவிரி குடிநீர் திட்டம் என ஏராளமான திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார். நிறைய திட்டங்கள் கொண்டு வரப்படும்” என்றார். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக அங்குள்ள பட்டாளம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழிபாடு செய்தார். கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் கோட்டாட் சியர் முகமதுபைசல், கரூர் மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, துணை மேயர் ப.சரவணன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள் எ ஸ்.பி.கனகராஜ், சக்திவேல், கரூர் வட்டாட்சியர் குமரேசன், கரூர் டிஎஸ்பி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: “தமிழக முதல்வர், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்கவில்லை என ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு பிறகும் அந்த அறிக்கை குறித்து கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது. ஒன்று ஒரு முறை படித்து தெரிந்திருக்கலாம். படித்து புரியவில்லை என்றால் பலமுறை படித்து யோசித்திருக்கலாம். புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் விளக்கத்தை கேட்டு, சரி பண்ணி கொள்ளலாம். படித்தும் புரியவில்லை, தெரிந்தவர்களிடம் கேட்டும் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை. அந்தளவுக்கு அறிவுத்திறனும் இல்லை.

ஒரு கருத்தை பேசும் போது, மாற்றுக் கருத்தை முன் வைக்கிறோம். இந்த 3 ஆண்டுகளில் அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான வர்த்தக தொடர்புகள் இல்லை என தெளிவாக கூறியுள்ளோம். பாஜகவில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சராகவில்லையா? அவர்கள் சொல்லக்கூடிய குற்றசாட்டு என்பது ரூ.7.01 மின்சாரம் வாங்கியது. இது கடந்த ஆட்சியில் போடப்பட்ட மின் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிதி என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. நாங்கள் தடையாணை கேட்டோம். வழங்கப்படவில்லை. அதனால், அந்த நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் ஒப்பந்தம் போட்டதை போல, எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டதை போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சி ஒரு போதும் எடுபடாது, அது மக்களுக்கு தெளிவாக தெரியும். தமிழக முதல்வர் வழங்கக்கூடிய சிறப்பு திட்டங்களையும், பொற்கால ஆட்சியையும் மக்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் வென்று தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் இது மக்கள் மனதில் வைத்திருக்க கூடிய அன்பு, பாசம். இதுதான் யதார்த்த நிலை.

மத்திய அரசு நிறுவனமான சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். அவர்கள் யாரிடம் கொள்முதல் செய்கிறார்கள் என்பது தெரியாது. எவ்வளவு மின்சாரம் பெறுவதற்கான தொகையை அந்த நிறுவனத்திடம்தான் கொடுப்போம். எந்த தனியார் நிறுவனங்களுக்கும் கொடுப்பதில்லை. அப்படி எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதைத்தான் தெளிவாக சொன்னோம்.

நாட்டிலேயே மிகக் குறைந்த யூனிட் ஒன்றுக்கு ரூ.2.61 என்ற அளவில் கொள்முதல் செய்வது தமிழ்நாடு மின்சார வாரியம்தான். இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் அரசு மீது ஏதாவது ஒரு புகார்களை சொல்லிவிட முடியாதா, மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை உருவாக்கிட முடியாதா என்பதை பூதக்கண்ணாடி போட்டு சல்லடை போட்டு தேடுகின்றனர். தேடி தேடி பார்க்கின்றனர்.

சில முயற்சிகளும் எடுக்கின்றனர். அவர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிகிறது. அந்த விரக்தியில்தான் அறிக்கைகள் வருகிறது. அறிக்கைகள் மற்றும் விமர்சனங்களை பார்த்து நாங்கள் ஒரு போதும் அஞ்சுவதும் இல்லை, சிந்தித்ததும் இல்லை. சரியான அறிக்கையாக இருந்தால் அதை நாங்கள் யோசித்து பார்ப்போம், அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சிலர் வெளிநாடுக்கு போய் படித்ததாகக் கூறுகின்றனர். அந்த குழுவில் 11 பேர் சென்றனர். அதில், சேலம் ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான ரோகிணி சென்றிருந்தார். ஆனால் அதுகுறித்து தகவல் இல்லை. யாரும் படிக்காததை படித்து வந்தது போலவும், அந்த படிப்பினால் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குபோல செய்திகள் வருகின்றன.

ஆண்டுதோறும் இந்த பயிற்சிக்கு 10, 12 பேர் 15 பேர் வரை செல்கின்றன்ர. அந்த குழுவில் 3 ஐஏஎஸ், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். எந்த இடத்திலும் மக்கள் செல்வாக்கு இல்லாத நபர்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுகின்றன. அந்த பயிற்சிக்கு அரசியல்வாதிகளும் செல்லலாம், பத்திரிக்கையாளர்களும் செல்வார்கள்.

மத்திய அரசு அவர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது. அந்த 11-ல் ஒன்றுதான் அவர். மக்களிடத்தில், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தக் கூடிய தமிழக முதல்வரை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து மக்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் ஆதரவை மக்கள் வழங்குவார்கள். 2026 தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெறும் என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *