கோவை: “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜகவுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இதுதான் இறுதித் தேர்தல்” என கோவையில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம், கோவை சிவானந்தா காலனியில் இன்று (நவ.11) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து, முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி பேசியது: ”வாக்களிப்பதுது நம் உரிமை. அந்த உரிமையை மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தின் மூலம் பறிப்பதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது.
ஒருகட்டத்தில் வருமான வரித் துறை (ஐ.டி), அமலாக்கத் துறை (இ.டி), சிபிஐ ஆகியவற்றையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ளே கொண்டு வந்து, குறுக்கு வழியில், அடக்குமுறையை ஏவி, ஆட்சியை பிடிக்க நினைத்த பாஜக அதில் தோல்வியை கண்டது. காரணம், இது திராவிட மண். ஐடி, இடி, சிபிஐ ஆகியவற்றால் முடியாததை, வேறு எதை வைத்து சாதிக்கலாம் என்று நினைத்த பாஜக அரசு, தேர்தல் ஆணையத்தை கையில் எடுத்துள்ளது. பிஹார் போல், தமிழகத்தில் லட்சக்கணக்கான உரிமை உள்ள வாக்காளர்களை நீக்கும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
30 நாட்களில் 7 கோடி வாக்காளர்களுக்கு படிவங்களை கொடுத்து, பூர்த்தி செய்து, திரும்பப் பெற்று, ஆன்லைனில் ஏற்றி வரைவு வாக்காளர் பட்டியலில் வரும் என்று சொன்னால், நிச்சயம் அது முடியாது என அனைவருக்கும் தெரியும். இது தெரிந்தும், தேர்தல் ஆணையம் இதை முன்னெடுத்துள்ளது. பிஹாரில் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மீண்டும் 21 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதில், நீக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் சேர்க்கப்படவில்லை. அந்த நிலையை தமிழகத்தில் உருவாக்க பாஜக அரசு தேர்தல் ஆணையத்தின் மூலம் முன்னெடுத்துள்ளது.
தமிழகத்தில் 2026 தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக குறுக்கு வழியில் பாஜக அரசு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளனர். அவர்களுக்கு அடிமையாக அதிமுக உள்ளது. எஸ்ஐஆரில் பல்வேறு திருத்தங்களை பாஜக கூட்டணிக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு அடிமை அதிமுக பழனிசாமி ஆதரிக்கிறார் என்றால், இதை விட கேடு கெட்ட நிலைமை தமிழ்நாட்டில் இனி எக்காலத்திலும் வராது.
தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் பாஜக அரசுக்கு துணை போகும் அதிமுகவுக்கு இந்த தேர்தல் இறுதி தேர்தலாக இருக்கும். அது கோவையிலும் இறுதித் தேர்தலாக இருக்கும்” என்று செந்தில் பாலாஜி பேசினார்.