“பாஜகவுடனான கள்ளக் கூட்டணியைக் காப்பாற்ற அதிமுக நாடகம்” – ஜெயக்குமாருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி | ADMK drama to save its fake alliance with bjp – Minister Regupathy

1353301.jpg
Spread the love

சென்னை: “தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக, திமுக நாடகம் நடத்துகிறது என சொல்வதற்கு ஏதாவது தகுதியிருக்கிறதா?அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழக மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தொகுதி மறுசீரமைப்பின் பெயரால் தமிழகத்துக்கு ஏற்படப்போகும் பேராபத்தை உணர்ந்து தமிழக முதல்வர் நடத்திய அனைத்துக் கட்சிகூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழகத்தின் ஒற்றுமைக்குரலை வெளிப்படுத்த வேண்டும் எனும் முனைப்போடு முதல்வர் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

தமிழர்களுக்கு எதிரியான பாஜகவும் அதன் எடுபிடிகள் சிலரையும் தவிர அனைவரும் பங்கெடுத்து முதல்வரின் முன்னெடுப்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். அதிமுகவும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு கொடுத்தது, ஆனால் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என மாற்றிப் பேசுகிறார்.

தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழகத்தின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு ஏதாவது தகுதியிருக்கிறதா?அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழக மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது.

பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெறப் போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை.முதல்வரின் தலைமையில் தமிழகம் போராடும், தனது உரிமையை வெல்லும்.” என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *