எடப்பாடி பழனிசாமி உடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக உரிமை மீட்டு இயக்கம் என்று அவரது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வத்திற்கு கடந்த சில நாட்களாக கடும் சவால்களை சந்தித்து வருகிறார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பன்னீர்செல்வம் எந்த முடிவும் எடுக்காமல் திணறி வந்தார். மீண்டும் அதிமுகவில் இணைந்து அரசியல் பணியை மேற்கொள்வது என்ற முடிவில் பன்னீர்செல்வம் உறுதியாக இருந்தார். ஆனால் அவரது ஆதரவாளர்கள் தனிகட்சி, விஜய் உடன் கூட்டணி என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஆனால் எந்த முடிவையும் எடுக்காமல் பன்னீர்செல்வம் தாமதப்படுத்தி வந்ததால், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் ஐக்கியமாகினர். ஆனால் பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுகவில் தன்னை இணைத்து கொள்ள பாஜக உதவி செய்யும் என நம்பி கொண்டு இருந்தார்.
ஆனால் பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்த்து கொள்வது இல்லை என்பதில் எடப்பாடி திடமாக இருந்தார். இந்தநிலையில், கடந்த 20-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரான கடைசிநாளில் முதல்வர் ஸ்டாலினை பன்னீர்செல்வம் சந்தித்து பேசி இருந்தார். அப்போது இருந்தே திமுகவில் பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக தகவல் பரவின. ஆனால் இதற்கு பன்னீர்செல்வம் தரப்பில் எந்த மறுப்பும் தெரிவிக்கபடவில்லை.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தி.மு.க.வில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கி இருந்தார். காலை 9 மணியளவில் அமைச்சர் சேகர்பாபு அந்த ஹோட்டலுக்கு சென்று பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 30 நிமிட ஆலோசனைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஒரே காரில் அறிவாலயத்திற்கு சென்றனர்.
ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் காலையில் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர். 9.36 மணியளவில் அறிவாலயத்து ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக ரவீந்திரநாத் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் அறிவாலயத்தில் காத்து இருந்தனர்.
அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து ஓ.பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத்,எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தனர். திமுக உறுப்பினர் படிவத்திலும் கையெழுத்தி பன்னீர்செல்வம் கட்சியில் இணைத்து கொண்டார். திமுகவில் இணைந்த பன்னீர்செல்வம் தனது பாக்கெட்டில் வழக்கமாக இருக்கும் ஜெயலலிதா படத்தை அகற்றி இருந்தார். அதே போன்று தனதுகாரில் வைத்திருந்த ஜெயலலிதா புகைப்படத்தையும் பன்னீர்செல்வம் எடுத்துவிட்டார்.
