என்.சி.இ.ஆர்.டி பாட புத்தகத்தில் இந்திய நீதித்துறையில் ஊழல்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. `இதில் தொடர்புடையவர்கள் அத்தனை பேரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” எனவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் எச்சரிக்கையை கொடுத்துள்ளார். ஆனால் மத்திய பாஜக அரசு மற்றும் நீதித்துறையின் இடையிலான இந்த மோதல் போக்கு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது..
இனி அது குறித்து விரிவாக காணலாம்…

இந்திய ஜனநாயகத்தின் தூண்களான நிர்வாகத் துறையும் (Executive) நீதித்துறையும் (Judiciary) கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒரு தொடர்ச்சியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. குறிப்பாக, மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல், நீதிபதிகள் நியமனம் மற்றும் தீர்ப்புகளில் தொடர் சர்ச்சைகள் இருந்து வருகிறது.
மோதலின் தொடக்கம்: NJAC விவகாரம் (2014-2015)
பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், செய்த முதல் முக்கிய சட்டத்திருத்தம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (NJAC) ஆகும்.
அதுவரை நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலீஜியம்’ (Collegium) முறையை ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாக மத்திய அரசு அந்தப் பணியை மேற்கொள்ளும் வகையில் தேசிய நீதிபதிகள் தேர்வு ஆணையம் என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
2015-ல் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை “அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது” என்று கூறி ரத்து செய்தது. இது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதுவே அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான போரின் தொடக்கப்புள்ளி.