பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் ஓபிஎஸ் | OPS meets CM Stalin post announcing exits from BJP alliance

1371457
Spread the love

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். இதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீண்ட காலமாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், பாஜக தலைமை அவரிடம் பாராமுகமாக இருந்த நிலையில்கூட, நாங்கள் பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம் என கூறி வந்தார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து, 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருக்கிறது. இக்கூட்டணி தொடர்பான அறிவிப்பின்போது, ஏற்கெனவே கூட்டணியில் நீடிக்கும் தன்னை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது என ஓபிஎஸ் கூறியிருந்தார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது விமான நிலையத்தில் வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

தர்மயுத்த காலத்தில் பலமுறை சந்திக்க தயாராக இருந்த பிரதமர் மோடி, தற்போது வரவேற்கக்கூட அனுமதிக்காதது ஓபிஎஸ்-க்கு கடும் அதிருப்தி, மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டது. இதனால், பாஜக கூட்டணியில் நீடிப்பதா, விலகுவதா என அவர் குழப்பத்தில் இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அதில், இன்றைய அரசியல் நிலைமை, தமிழகத்தின் எதிர்காலம், மக்கள் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தனது உறவை முறித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது. மேலும், தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.

கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்யவில்லை. எந்த கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி என்று சிறிது காலம் கழித்து, அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். தமிழக மக்களை சிறப்பாக வழிகாட்டி அழைத்துச் செல்லும் சிறப்பான கூட்டணி எதிர்காலத்தில் அமையும். எங்களை நிலைநிறுத்திக் கொண்டு, அதன் பிறகுதான் கூட்டணி குறித்து தீர்மானிப்போம். யாரை வீழ்த்த வேண்டும்

என்பது எங்கள் குறிக்கோள் அல்ல, யாரை வாழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்.

கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணம் நாடறிந்தது. அதை எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடே அறியும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு நேற்று மாலை சென்ற ஓபிஎஸ் 30 நிமிடங்களுக்கு மேல் முதல்வருடன் உரையாடினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. அதுதான்

கடந்தகால வரலாறு. தேர்தல் நெருங்கும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லோரும், எல்லோருடனும் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர். வெற்றி பெற்றுள்ளனர், தோல்வியும் அடைந்திருக்கிறார்கள்.

கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, பாஜகவில் இருந்து இதுவரை யாரும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. எனக்கு சுயமரியாதை இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்.

மக்களவையில் கல்வி நிதி குறித்து கேள்வி எழுப்பியபோது, மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் நிதியை நிறுத்தி வைத்ததாக கூறுகின்றனர். ஜனநாயக நாட்டில் இது ஏற்புடையது அல்ல. மத்திய, மாநில அரசுகளின் அத்தனை குறைகளையும் தினமும் அறிக்கை வாயிலாக தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *