மத்தியப் பிரதேசத்தில் பாஜக மாவட்டத் தலைவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தின் பாஜக துணைத் தலைவராக இருப்பவர் யோகேந்திர சோலங்கி. இவர் மீது 23 வயது பெண் ஒருவர் விதிஷா காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இப்பெண் சோலங்கிக்கு மருமகள் முறை என்றும் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,
யோகேந்திர சோலங்கி பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், பலமுறை வன்கொடுமைக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பாலியல் புகாரைத் தொடர்ந்து, பாஜக துணைத் தலைவர் பொறுப்பை சோலங்கி ராஜிநாமா செய்தார். மேலும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினார்.
தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் சோலங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.