பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு – முழு விவரம் | 4 get life imprisonment in BJP leader murder case

Spread the love

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம் கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்(30), காளையார்கோவில் பாஜக ஒன்றிய இளைஞர் அணி தலைவராக இருந்தார். இவர், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடியில் கோழி மொத்த வியாபாரக் கடை நடத்தி வந்தார்.

கடந்த 2015 அக்டோபரில் பரமக்குடி அருகே தென்பொதுவக்குடி பகுதியில் காரில் ரமேஷ் சென்றபோது, காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணனின் கார் உரசியது. இதில் ரமேஷுக்கும், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் தேவராஜுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில், 2015 நவ.23-ம் தேதி புழுதிக்குளம் பகுதியில் காரில் சென்ற ரமேஷை ஒரு கும்பல், வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக பாம்பு விழுந்தானைச் சேர்ந்த பாலாஎன்ற பரம்பை பாலா (52), பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்த தேவராஜ் (22), இவரது தந்தை வேலுச்சாமி (65), திருமுருகன் (32), கருணாகரன் (32), மகேந்திரன் (53), காட்டுப்பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் (59), சுரேஷ்குமார் (50), ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடையைச் சேர்ந்த தவமணி (64) உள்ளிட்ட 12 பேர் மீது பரமக்குடி தாலுகா போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

ராமநாதபும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. விசாரணையின்போது, தேவராஜ், பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மெஹபூப் அலிகான் நேற்று தீர்ப்பளித்தார். அதில், பரம்பை பாலா, வேலுச்சாமி ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், திருமுருகன், கருணாகரன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தவமணிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், மகேந்திரன் மற்றும் சுரேஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. 3 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *