பாஜக வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவா் கபிலனை தமிழகக் காவல்துறையினா் கைது செய்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கண்டன செய்தியில்,
பாஜக வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவா் கபிலனை தமிழகக் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக அவரைக் கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறிக் கொண்டிருக்கையில், திமுக தனது அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர், பாஜகவினரை முடக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
இது போன்ற அடக்குமுறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியையோ, முதல்வர் ஸ்டாலினின் கையாலாகாத்தனத்தையோ மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான இதுபோன்ற அடக்குமுறைகளைக் கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம்-ஒழுங்கைக் கவனியுங்கள் முதல்வரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.