பாஜக-வின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது: தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | CM Stalin Speech about SIR at Dharmapuri Marriage Function

Spread the love

தருமபுரி: பாஜகவின் எந்த சதித் திட்டங்களும் தமிழகத்தில் எடுபடாது என தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் பென்னாகரம் சாலையில் இன்று (நவம்.3ம் தேதி) நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய முதல்வர் கூறியதாவது: “அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய கையோடு இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தீய மற்றும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. அதைத் தடுப்பதற்காகவே நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு உரிய அவகாசம் தேவை, பதற்றத்துடன் இந்தப் பணியை செய்ய வேண்டியது இல்லை என்றும் வலியுறுத்தி உள்ளோம். உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திர செயலாகவே இதை பார்க்கிறோம். பிஹாரிலும் இதுவே நடந்தது. இளம் தலைவர் ராகுல் இதை கடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் வரவில்லை.

ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு சந்தேகமும் இருக்கிறது. இது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. பாஜகவின் பாதம் தாங்கியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். பாஜக இது போன்ற எந்த சதிச் செயலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது. தன்னை எல்லோருக்குமான பிரதமர் என்று பிஹாரில் கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி வாக்கு அரசியலுக்காக அங்கு நாடகம் நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் வந்து இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு தைரியம் உள்ளதா? பாஜகவினர் என்ன சதி செய்தாலும், அவதூறு பரப்பினாலும், போலியான தகவல்களைப் பரப்பினாலும் 2026 தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும். தமிழக மக்கள் மீதான நம்பிக்கையில் இதைக் கூறுகிறேன். துணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

2021-ல் கொத்தடிமை அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்டோம். 2026-ல் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியிடம் இருந்து தமிழகத்தை மீட்போம். தமிழக தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயரிட்டு அழைத்து மகிழுங்கள்” என்று முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எ.வ.வேலு, சிவசங்கர், ராஜேந்திரன், விசிக தலைவர் திருமாவளவன், தருமபுரி எம்.பி மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தருமபுரியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளையும், தடங்கம் பகுதியில் புதிய சிப்காட் வளாகம் அமைக்கும் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் காரில் சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *