பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல் | Textbook price hike must be rolled back immediately: EPS urges Tamil Nadu govt

1295288.jpg
Spread the love

சென்னை: “தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று பாடப் புத்தகங்களின் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.14) விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 39 மாத கால திராவிட மாடல் என்னும் திமுக ஆட்சி, 6 முதல் 60 வரை, வயது பேதமின்றி அனைவரையும் வாட்டி வதைத்து, கசக்கிப் பிழிந்து வருவது கண்கூடு. நின்றால் வரி, நடந்தால் வரி, பேசினால் வரி, தண்ணீர் குடித்தால் வரி என்று அனைத்து வரிகளையும் மக்களின் தலையில் சுமத்திவிட்டு அவர்களை கடனாளியாக்கும் வேலையை, இந்த திமுக அரசின் முதலமைச்சர் கனக்கச்சிதமாக மேற்கொண்டு வருகிறார்.

‘கல்விக் கண்’ திறந்த காமராஜர், ‘எந்த ஒரு குழந்தையும் பசியினால் கல்வி பயிலாமல் இருக்கக்கூடாது’ என்று எண்ணிய எம்.ஜி.ஆர்., ஆதரவற்ற நிலையில் குழந்தைகளே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ‘தொட்டில் குழந்தை திட்டம்’ கொண்டு வந்த ஜெயலலிதா, எதிர்கால சந்ததியினர் நலனுக்காக நல்லாட்சிகளை வழங்கினார்கள்.

ஜெயலலிதாவின் நல்லாட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி போன்ற நலத் திட்டங்களை நிறுத்திவிட்டு அந்த நிதியை உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நிபந்தனையுடன் கல்வி உதவித் தொகையாக மடைமாற்றியது திமுக அரசு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும் நிதியுதவி என்ற பெயரில் நிபந்தனையுடன் சிலருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி, பலருக்கு கிடைக்காமல் கடும் மன வேதனையில் மாணவர்கள் இருக்கும் இச்சூழ்நிலையில், திமுக பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவர் தலைமையேற்று நடத்தும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் விலையை சுமார் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. இந்த விலை உயர்வு கடும் கண்டனத்திற்குரியது.

1-ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள் ரூ. 390-ல் இருந்து ரூ. 550-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு 1-ஆம் வகுப்பில் தொடங்கி 10-ஆம் வகுப்புவரை அனைத்து பாடப் புத்தகங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாநில கல்வித் திட்டத்தின்படி தனியார் பள்ளகளில் மாணவ, மாணவிகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். பாடப் புத்தகங்களின் விலை உயர்வு தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களையும் பாதிக்கும்.

ஏற்கெனவே கடுமையான விலைவாசி உயர்வினாலும், பல மடங்கு அரசு கட்டணங்கள் உயர்வினாலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மக்களின் தினசரி வாழ்வில் ‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல்’, தற்போது உயர்த்தப்பட்டுள்ள பள்ளி பாடப் புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று, இந்த மக்கள் விரோத திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *