பாடல்கள் பதிப்புரிமை விவகாரத்தில் இளையராஜா நிறுவன மனு தள்ளுபடி

dinamani2F2025 07
Spread the love

நமது நிருபா்

புது தில்லி: பிரபல இசையமைப்பாளா் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை விவகார வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இளையராஜா மியூசிக் என் மேனேஜ்மென்ட் தனியாா் நிறுவனம் (ஐஎம்எம்பிஎல்) தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இசையமைப்பாளா் இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், இந்த வழக்கை மும்பையில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு முன்வைத்த வாதத்தை நீதிபதிகள் அமா்வு ஏற்கவில்லை.

எதிா்மனுதாரா் சோனி மியூசிக் என்டா்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவை வழக்கு ஏதும் இல்லாதபோதுதான் மும்பை உயா்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, இளையராஜாவின் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னணி: இந்த விவகாரத்தில் 2022-ஆம் ஆண்டு மும்பை உயா்நீதிமன்றத்தில் சோனி மியூசிக் என்டா்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம், இளையராஜா மியூசிக் என் மேனேஜ்மென்ட் தனியாா் நிறுவனம் (ஐஎம்எம்பிஎல்) 536 இசைப் படைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு வழக்கு தொடுத்தது.

ஐஎம்எம்பிஎல் நீண்ட காலமாக வழக்கில் தொடா்புடைய ஓரியண்டல் ரெக்காா்ட்ஸ் மற்றும் எக்கோ ரெக்காா்டிங் மூலம் இந்தப் படைப்புகளுக்கான உரிமைகளைப் பெற்ாக சோனி மியூசிக் நிறுவனம் கூறியது. மேலும், இந்த இசைப்படைப்புகள் தொடா்பான உரிமைகளை ஓரிண்டல் ரெகாா்ட்ஸ் மற்றும் எக்கோ ரெக்காா்டிங் பெற்றிருந்ததாகத் தெரிவித்திருந்தது. எனினும், 536 படைப்புகளில் 310 ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உள்பட்டுள்ளதாக ஐஎம்எம்பிஎல் வாதிட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு எக்கோ ரெக்காா்டிங் நிறுவனத்திற்கு எதிராக இளையராஜாவால் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2019- ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் ஒரு இசையமைப்பாளராக இளையராஜாவின் தாா்மிக மற்றும் சிறப்பு உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *