கரூர் சம்பவத்துக்குப் பிறகு, ஆளும் கட்சியின் ‘பாட்டில்’ விஐபி தனது அரசியல் நடவடிக்கைகளை சொந்த மாவட்டத்துக்குள்ளேயே சுருக்கிக் கொண்டிருந்தார். தனது மண்டலத்துக்கு உட்பட்ட மான்செஸ்டர் சிட்டிக்குக் கூட அவ்வளவாய் போக்குவரத்து இல்லாமல் இருந்தவர், எஸ்ஐஆர் ஆர்பாட்டத்தை முன்னிட்டு மான்செஸ்டர் சிட்டியில் ரீ என்ட்ரி கொடுத்து தனது பழைய டாம்பீகத்தைக் காட்டிவிட்டாராம்.
ஆர்ப்பாட்டத்தை பேர் சொல்லும்படியாக நடத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக தனது செலவில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளை வாடகைக்குப் பிடித்து, அலைகடலென ஆட்களைத் திரட்டினாராம். ‘மாண்புமிகுவாக’ இருந்த போது மான்செஸ்டர் சிட்டிக்கு வந்தால் கட்டாயம் சர்க்யூட் ஹவுஸுக்குச் சென்று அங்கே அதிகாரிகளை வரவழைத்து ஆலோசனை நடத்துவார். பதவி இழந்த பிறகு சர்க்யூட் ஹவுஸ் பக்கம் போவதையும் தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் முடிந்த கையோடு, சர்க்யூட் ஹவுஸ் பக்கம் காரைத் திருப்பிய ‘பாட்டில்’ விஐபி, ஆட்சியர், போலீஸ் கமிஷனர் மற்றும் கழக விஐபி-க்களை அங்கு வரவைத்து ஆலோசனை நடத்தினாராம். இதையெல்லாம் பார்த்துவிட்டு, “தேர்தலுக்கு முன்பாகவே மாண்புமிகு பட்டியலில் இடம்பிடிக்க முன்னோட்டம் காட்டுறார் போலிருக்கு” என்று உடன்பிறப்புகள் ஒருவரை ஒருவர் காதைக் கடித்துக் கொண்டார்கள்.