மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் பாட்மின்டனில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாகவும் இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
சாய்னா நேவால்
34 வயதாகும் இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மின்டனில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். அவர் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2010 மற்றும் 2018 ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் சாய்னா நேவால் தங்கப் பதக்கம் வென்றார்.
மூட்டு வலி
மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாக சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது முழங்கால் நன்றாக இல்லை. எனக்கு மூட்டு வலி (ஆர்த்திரிட்டிஸ்) பிரச்னை இருக்கிறது. 8-9 மணி நேரம் தொடர்ச்சியாக பயிற்சி செய்வது என்பது மிகவும் கடினமாக மாறியுள்ளது. நீண்ட நேரம் பயிற்சி செய்யாமல் உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகளுடன் எப்படி போட்டியிட முடியும். போட்டிகளில் வெல்வதற்கு இரண்டு மணி நேர பயிற்சியெல்லாம் போதாது.
ஓய்வு குறித்து சிந்திக்கிறேன்
மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் சாய்னா நேவால் பாட்மின்டனில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும் சிந்தித்து வருவதாகவும் பேசியுள்ளார்.
ஓய்வு பெறுவது குறித்து அவர் பேசியதாவது: பாட்மின்டனில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும் சிந்தித்து வருகிறேன். பாட்மின்டனில் இருந்து ஓய்வு பெறுவது வருத்தமாக இருக்கும். விளையாட்டுத் துறையில் உள்ள ஒருவரின் பயணம் என்பது குறுகிய காலம் மட்டுமே. நான் எனது 9 வயதில் பாட்மின்டன் விளையாடத் தொடங்கினேன். அடுத்த ஆண்டு எனக்கு 35 வயதாகும். பாட்மின்டனில் இத்தனை ஆண்டுகள் விளையாடியதை நினைத்து பெருமைப் படுகிறேன். பாட்மின்டனுக்காக எனது உடலை மிகவும் வருத்திக் கொண்டுள்ளேன்.
ஒலிம்பிக் போட்டி கனவு
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் சிறுவயது கனவாக இருக்கும். பல ஆண்டுகளாக கடின உழைப்பைக் கொடுத்து ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக வேண்டியிருந்தது. உங்களால் தொடர்ந்து ஒலிம்பிக்கில் விளையாட முடியாது என்பது வருத்தத்தை அளிக்கும். நீங்கள் விளையாட விரும்பவில்லை என்பது இங்கு பொருளல்ல. நீங்கள் தொடர்ந்து விளையாடுவதற்கு உங்களது உடல் ஒத்துழைக்கவில்லை.
நான் நிறைய கடின உழைப்பைக் கொடுத்துள்ளேன். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளேன். அந்த போட்டிகள் அனைத்திலும் என்னுடைய 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துள்ளேன். அதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
சாய்னா நேவால் கடைசியாக சிங்கப்பூர் ஓபனில் ஓராண்டுக்கு முன்பு விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.