பாதுகாப்புத் தோல்வி! பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

Dinamani2f2025 04 242fixnqzza72fgpmwgsba4aao8om.jpg
Spread the love

பஹல்காமில் தாக்குதல் நடத்தியது யார்? பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு இடையே, பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறியதற்கு பொறுப்பேற்கப் போவது யார்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சுற்றுலா நகரமான பெஹல்காமில் மினி ஸ்விட்சர்லாந்து என்றழைக்கப்படும் பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் உலகையே உலுக்கியிருக்கிறது.

பல கனவுகளுடன் ஆசைகளுடனும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 26 ஆண்கள் அவர்களது, மனைவி, குழந்தைகள் கண் முன்னே பயங்கரவாதிகளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களைவிட, தங்களது உயிருக்கு உயிரான உறவு கண் முன்னே கொலை செய்யப்பட்டதைப் பார்த்தவர்களின் மனநிலைதான் மிகவும் துயரத்துக்குரியது.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, அட்டாரி – வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியா்கள் இந்தியாவுக்கு பயணிக்க தடை, தூதரகப் பணியாளர்கள் வெளியேற காலக்கெடு, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்களை திருப்திப்படுத்த முயன்றுள்ளது மத்திய அரசு.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், கோடை விடுமுறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் சுற்றுலாத் தலத்தில் ஒரு ராணுவ வீரர்கூட பாதுகாப்பு அளிக்காதது ஏன்? என்பதே பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.

ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால் இப்படியொரு துயரச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது அங்கிருந்து உயிர் தப்பியவர்களின் கருத்து.

இதுபோன்ற தாக்குதல் நடக்கப் போகிறது என்ற தகவல் ஏன் கிடைக்கவில்லை? அதற்கு உளவுத் துறை தோல்விக்காக உள்துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளிக்காததற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பொறுப்பேற்பாரா? அல்லது இவர்களுக்கெல்லாம் சுப்ரீமான பிரதமர் பொறுப்பேற்பாரா?

இது முதல்முறை அல்ல. புல்வாமா தாக்குதலின்போதும் இதே கூற்றுதான். விமானம் கோரிய மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சாலை வழியாக வீரர்களை அழைத்துச் சென்றதன் விளைவாக பயங்கரவாதத் தாக்குதலில் 41 வீரர்களை இழந்தோம்.

300 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்துகள் ஏற்றிய வாகனத்தில் 10 நாள்களுக்கு மேல் ஜம்மு – காஷ்மீர் சாலைகளில் சுற்றுத் திரிந்த பயங்கரவாதிகள், சிஆர்பிஎஃப் வீரர்கள் வந்த வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

பதற்றம் மிகுந்த ஜம்மு – காஷ்மீர் பகுதியில் வெடிமருந்துகளுடன் சுற்றிய வாகனம் குறித்து துப்பு சேகரிக்காதது உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வியாக கருதப்பட்டது.

இந்த தாக்குதலுக்கும் உள்துறை அமைச்சரோ, பிரதமரோ பொறுப்பேற்கவில்லை.

இதுதொடர்பாக பின்னாளில் பேசிய முன்னாள் ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், புல்வாமா தாக்குதல் மத்திய அரசின் திறமையின்மை மற்றும் கவனக்குறைவின் விளைவு என்று விமர்சித்திருந்தார்.

ஆளுநர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பாஜகவின் கட்சிப் பொறுப்புகளில் இருந்த சத்ய பால் மாலிக், புல்வாமா தாக்குதல் சமயத்தில் ஜம்மு – காஷ்மீர் ஆளுநராக பதவி வகித்தவர்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக கரண் தாப்பர் நேர்காணலில் பேசிய சத்ய பால் மாலிக்,

”சிஆர்பிஎஃப் தரப்பில் வீரர்களை அழைத்துச் செல்ல விமானம் கேட்கப்பட்டது, உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் சாலை வழியாக வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனங்கள் சென்ற வழியில் உரிய வாகன சோதனைகளும் செய்யப்படவில்லை. இதற்கு முழுக்க முழுக்க உள்துறைதான் பொறுப்பு.

இதுதொடர்பாக மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, யாரிடமும் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.” எனத் தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதுமட்டுமின்றி, பாலக்கோடு விமானப் படைத் தாக்குதல், உரி ராணுவ தள தாக்குதல், அமர்நாத் யாத்திரை தாக்குதல், ரியாசி யாத்திரை தாக்குதல் என பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்றது இல்லை.

இதற்கு முன்னதாக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் படேல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்டோர் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத் தக்கது.

அச்சுறுத்தல் நிறைந்த ஜம்மு – காஷ்மீர் பகுதியில் மக்கள் அதிகளவில் கூடும் மிக முக்கிய சுற்றுலாத் தலத்தில்கூட அடிப்படை பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை.

இதே சம்பவம், வார இறுதி நாள்களில் நடைபெற்றிருந்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

பைசாரன் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல், ஒருபக்கம் இந்து – முஸ்லிம் பிரிவினையைத் தூண்டும் வகையில் திசைதிருப்பப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் காரணமாக, அப்பகுதியில் சுற்றுலாவே பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. அதுவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சமடையும் கோடை விடுமுறை காலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக இன்று மட்டும் முன்பதிவு செய்யப்பட்ட 90 சதவிகித அறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் இந்திய ராணுவத்தில் மட்டும் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

தவறுகளை மத்திய அரசு உணருமா? நேரிட்ட உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு?

இதையும் படிக்க : பிஸ்மில்லா, பிஸ்மில்லா… பெஹல்காமில் காயமுற்றோரை மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *